பெட்டாலிங் ஜெயா: கோலாலம்பூர் குழியில் விழுந்த சுற்றுப்பயணியைத் தேட பகல் இரவு எனப் பாராமல் நாள் முழுவதும் பணியாற்றினர் மலேசிய தேடல், மீட்பு அதிகாரிகள்.
ஒரு நாளில் இரண்டு மணி நேரத் தூக்கம்கூட அவர்களுக்கு இல்லை.
ஒன்பது நாள்கள் பெருமுயற்சியுடன் மேற்கொள்ளப்பட்ட பணிகள் ஆகஸ்ட் 31ஆம் தேதி கைவிடப்பட்டபோது, தேடல் பணிகளில் ஈடுபட்டிருந்த 80 ஆண்களும் பெண்களும் மனமுடைந்து போயினர். காணாமல்போன 48 வயது விஜயலெட்சுமியைக் கண்டுபிடிக்கமுடியவில்லை.
மஸ்ஜித் இந்தியா சாலையில் ஆகஸ்ட் 23ஆம் தேதி 8 மீட்டர் ஆழம் கொண்ட குழியில் அவர் விழுந்துவிட்டார். அந்தச் செய்தி உலகம் முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
“மிகச் சோர்வாக இருந்தபோதும், மாதைக் கண்டுபிடிப்பதற்கு மீண்டும் குழிக்குள் இறங்க, தேடல், மீட்புப் பணியாளர்கள் தயாராக இருந்தனர். அவரைக் கண்டுபிடித்து விடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், அது நடக்கவில்லை,” என்று கோலாலம்பூர் தீயணைப்பு, மீட்புத் துறையின் துணை இயக்குநர் ரொஸிஹான் அன்வார் மமாட் கூறினார்.
‘த ஸ்டார்’ நிறுவனத்துடன் நடைபெற்ற நேர்காணலில், “உலகமே அச்சம்பவத்தை அறிந்திருந்ததும், நமது ஒவ்வொரு நடவடிக்கையையும் உலகம் பார்த்துக்கொண்டிருந்ததும் எங்களுக்குத் தெரியும்,” என்று திரு ரொஸிஹான் கூறினார்.
“அனைத்து முயற்சிகளையும் எடுத்தோம். மாதைத் தேடுவதற்கு உத்திகளை வகுத்தோம்,” என்றும் அவர் சொன்னார்.
நிலத்தடிக் கழிவுநீர்ப் பாதைகளில் ஆழமாகச் செல்லக்கூடிய நிபுணத்துவ முக்குளிப்பாளர்கள் அவரின் குழுவில் அடங்குவர்.
தொடர்புடைய செய்திகள்
இருபது மணி நேரத்திற்குப் பிறகும் காணாமல்போயிருப்போரைத் தேடுவதற்கான அதிக அபாயமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதி இல்லை என்பது துறையின் வழக்கமான செய்முறை என்றார் திரு ரொஹிஸான்.
இருப்பினும், தாமும் தமது குழு உறுப்பினர்களும் அந்த மாதைத் தேடுவதில் உறுதியாக இருந்தனர். அதனால் நடவடிக்கையைத் தொடர அவர்கள் முடிவெடுத்ததாக அவர் சொன்னார்.
இந்தச் சம்பவம் தமக்கும் தமது குழுவுக்கும் ஒரு புதிய அனுபவம் என்றார் அவர்.
தமது குழு காட்டிய உறுதி ஒருபுறம் இருக்க, பல்வேறு அமைப்புகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு தம்மை நெகிழ வைத்ததாகத் திரு ரொஸிஹான் கூறினார்.
“அனைவரும் ஒன்றிணைந்து பங்காற்றினர். நான் என்றைக்கும் இந்தத் தோழமையுணர்ச்சியை நினைவில் கொள்வேன்,” என்றார் அவர்.
இந்நிலையில், மஸ்ஜித் இந்தியா சாலையில் பாதிக்கப்பட்ட இடத்தை மீண்டும் சீர்ப்படுத்த மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை எடுக்கும் என்று மலேசியாவின் பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.