கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபாதையில் உருவான ஆழ்குழியில் விழுந்த இந்திய சுற்றுப்பயணியைத் தேடும் பணிகள் அதிகாரபூர்வமாக நிறுத்தப்பட்டுள்ளன.
“மீட்புப் பணியாளர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கருத்தில்கொள்ளப்பட்டு தேடல், மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன,” என்று மத்திய அரசாங்கத்தின் நேரடி நிர்வாகத்தில் வரும் கூட்டரசுப் பகுதிகளுக்கான பிரதமர் அலுவலக அமைச்சர் ஸலைஹா முஸ்தஃபா சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 31) தெரிவித்தார்.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பிரிவு, காவல்துறை உள்ளிட்டவற்றைச் சேர்ந்த வல்லுநர்களுடன் ஆலோசித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் டாக்டர் ஸலைஹா கூறினார்.
முடிவெடுப்பதற்கு முன்பு அமைச்சரவையிடம் தெரியப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“குழியில் விழுந்த மாதின் குடும்பத்தாருக்குத் தகவல் அளித்துவிட்டோம். அவர்களுடனும் இந்தியத் தூதரகத்துடனும் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்,” என்று டாக்டர் ஸலைஹா சொன்னார்.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள குப்பம் என்ற பகுதியைச் சேர்ந்த 48 வயது திருவாட்டி விஜயலக்ஷ்மி, ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதியன்று கோலாலம்பூரின் ஜாலான் மஸ்ஜித் இந்தியா பகுதியில் உருவான ஆழ்குழியில் விழுந்தார்.
சுற்றுப்பயணிகளிடையே பிரபலமாக இருக்கும் அப்பகுதிவழி அவர் அருகில் உள்ள கோயிலை நோக்கி நடந்துகொண்டிருந்தபோது நடைபாதையில் உருவான ஆழ்குழியில் அவர் விழுந்தார்.
அவருக்கான தேடல் பணிகள் நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில், அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை காவல்துறையினர் வழிநடத்துவர் என்று டாக்டர் ஸலைஹா தெரிவித்தார்.