கோலாலம்பூர்: கேஎல்சிசி ஹோல்டிங்ஸ், 486 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்காக பண்டார் மலேசியா, பண்டார் மலேசியா லேண்ட் ஆகியவற்றுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது.
ஜாலான் சுங்கை பெசியில் முன்பு அரச மலேசிய விமானப் படைத் தளம் இருந்த இடத்தில் அந்த இடம் உள்ளது. கையகப்படுத்தியற்கான விலை வெளியிடப்படவில்லை.
கேஎல்சிசிஎச் தனது அறிக்கையில் நில விற்பனை, நிலம் வாங்குவதற்கான ஒப்பந்தம் 2024 அக்டோபர் 4ஆம் தேதி போடப்பட்டதாக தெரிவித்தது.
இதையடுத்து கேஎல்சிசிஎச் நீண்டகால நோக்கத்தில் வர்த்தகரீதியில் அந்த இடத்தை மேம்படுத்தும். அது, அனைத்துலக வணிக மையமாகவும் சமூகத்திற்கான நகரத்தை உள்ளடக்கியதாகவும் இருக்கும்.
“நாட்டின் முக்கிய மேம்பாட்டு அடையாளமாக விளங்கும் கோலாலம்பூர் நகர மையம் (கேஎல்சிசி), புத்ரஜெயா ஆகியவற்றின் மூலம் கேஎல்சிசிஎச் தனது பெரிய அளவிலான நகர்ப்புற மேம்பாட்டில் உத்திபூர்வ ஆற்றலை நிரூபித்துள்ளது. பெருந்திட்டத்திலும் நீடித்த நிலைத்தன்மையிலும் ஒரு தரத்தை கட்டிக்காத்துள்ளது,” என்று கேஎல்சிசிஎச் தெரிவித்தது.
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், 2011ஆம் ஆண்டில் பண்டார் மலேசியா நிலப்பகுதிக்கான ஒரு திட்டத்தை அறிவித்திருந்தார்.
அது, 150 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான மாபெரும் நகரத்தை அமைக்கும் திட்டமாகும்.
அந்த இடத்தில்தான் தற்போது ரத்து செய்யப்பட்ட கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் நிலையம், நிலத்தடி வணிக வளாகம், கால்வாய், கருப்பொருள் அடிப்படையிலான பூங்காக்கள், நிதி மையம், குடியிருப்புகள் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
சொத்து முதலீட்டு நிறுவனமான கேஎல்சிசிஎச், கோலாலம்பூர் நகர மையம், புத்ராஜெயாவில் சொத்துகளை மேம்படுத்தி நிர்வகித்து வருகிறது.
கேஎல்சிசிஎச் தனது பெருந்திட்டத்தின் மூலமாக கோலாலம்பூரில் முக்கிய இடத்தில் அமைந்துள்ள நூறு ஏக்கர் நிலத்தை வர்த்தக வட்டாரமாக மாற்றியிருக்கிறது. அங்குதான் உலகின் உயரமான நாட்டின் தனிச்சிறப்புமிக்க அனைத்துலக தரத்திலான 452 மீட்டர் உயர பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரம் இடம்பெற்றுள்ளது.