பண்டார் ஸ்ரீ பகவான்: புருணை மன்னர் ஹசனல் போல்க்கியாவுக்கு இந்த வாரயிறுதியில் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் குணமடைய இரண்டு முதல் மூன்று மாதங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவரது அலுவலகம் அறிக்கை வெளியிட்டது.
நீண்டகாலமாக அரியணையில் அமர்ந்திருக்கும் மன்னர்களில் 79 வயது மன்னர் ஹசனல் போல்க்கியாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிறகு, ஓய்வு எடுக்கவும் இயன் மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ளவும் தேசிய மற்றும் அதிகாரபூர்வ நிகழ்வுகளில் கலந்துகொள்வதை அவர் குறைத்துக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அதிகாரபூர்வப் பணிகளை அவர் தொடர்வார் என்று அவரது அலுவலகம் கூறியது.
அறுவை சிகிச்சை ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 18) நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு மே மாதம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற தென்கிழக்காசிய தலைவர்களுக்கான உச்சநிலை மாநாட்டில் மன்னர் ஹசனல் போல்க்கியா கலந்துகொண்டபோது கடும் சோர்வு காரணமாக அவர் சில நாள்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

