அமெரிக்கச் சேவல்களை விமானங்களில் கொண்டுசெல்ல கொரியன் ஏர் தடை

அமெரிக்கச் சேவல்களை விமானங்களில் கொண்டுசெல்ல கொரியன் ஏர் தடை

1 mins read
சேவல் சண்டைக்கு கடும் எதிர்ப்பு
d26cbf2f-63cf-4c77-8592-a9c182132e2c
பிலிப்பீன்சின் சேவல் சண்டை தொழிலுக்கு அமெரிக்கச் சேவல்கள் முக்கிய ஆதாரமாக இருக்கின்றன. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மணிலா: பிலிப்பீன்சில் கொடி கட்டிப் பறக்கும் சேவல் சண்டைக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அமெரிக்காவிலிருந்து சேவல்களை தனது விமானங்களில் கொண்டுசெல்ல தென்கொரிய விமான நிறுவனமான கொரியன் ஏர் தடை விதித்துள்ளது.

இதனை விலங்குநல ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

சிறுகத்திகளைக் காலில் கட்டி சேவல்களை மோதவிடுகின்றனர். ஒரு நிமிட நேரத்துக்கும் குறைவாக நீடிக்கும் சண்டையில் சேவல்கள் சாகும்வரை போராடுகின்றன.

இதனை நாளும் பார்க்கும் பிலிப்பீன்ஸ் மக்கள் பல மில்லியன் டாலர் பந்தயம் கட்டுகின்றனர்.

இந்தச் சண்டைக்கு அமெரிக்காவிலிருந்து தருவிக்கப்படும் சேவல்கள் முக்கிய ஆதாரங்களாக உள்ளன என்று உள்ளூர் ஆர்வலரும் சேவல்களை வளர்ப்பவருமான எடுவார்டோ இயூஜினியோ கூறினார்.

கொரியன் ஏர் தடையால் சேவல் சண்டைத் தொழில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் அவர் தெரிவித்தார்.

மே 2ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் அமெரிக்காவிலிருந்து பிலிப்பீன்சுக்குச் செல்லும் வழித்தடங்களில் அனைத்து வயது சேவல்களையும் கொண்டுசெல்ல தடை விதிக்கப்படுகிறது என்று கொரியன் ஏர் தெரிவித்தது.

“தற்போது நடைமுறையில் உள்ள சட்ட, விதிமுறைகளுக்கு ஏற்ப உயிருள்ள விலங்குகளை சட்டபூர்வமாகவும் பாதுகாப்பாகவும் கொண்டுசெல்வதில் கொரியன் ஏர் உறுதியாக இருக்கிறது,” என்று அது குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்