கோத்தா திங்கி துப்பாக்கிச் சூடு; 71 வயது முதியவர் கைது

கோத்தா திங்கி துப்பாக்கிச் சூடு; 71 வயது முதியவர் கைது

படம்: த ஸ்டார்

19 Apr 2026 - 9:27 pm

2 mins read

கோத்தா திங்கி: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தின் கோத்தா திங்கி நகரில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என நம்பப்படும் முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) பிற்பகல் 2 மணியளவில், சம்பவ இடத்திலிருந்து 200 மீட்டர் தூரத்தில் 71 வயது மலேசிய ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் காவல்துறை தெரிவித்தது.

அதே நாள் நண்பகல் வேளையில் கோத்தா திங்கியில் உள்ள கோத்தா ஜெயா வட்டாரத்தில் உணவகம் ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மலேசிய ஆடவர்களும் வெளிநாட்டுப் பெண் ஒருவரும் கொல்லப்பட்டனர்.

மாண்ட மூவரும் 37 வயதுக்கும் 63 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

ஷாட்கன் வகை துப்பாக்கியைப் பயன்படுத்தி அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

கைது செய்யப்பட்டபோது சந்தேக நபரின் துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சந்தேக நபர் துப்பாக்கி உரிமம் வைத்துள்ளதாகவும் கூறினார்.

“சந்தேக நபருக்கு விவசாய நிலம் சொந்தமாக உள்ளது, இது அவர் துப்பாக்கி வைத்திருக்கத் தகுதியளிக்கிறது. அந்தத் துப்பாக்கி உரிமம் பூச்சிகள் மற்றும் விலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்கும் நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்பட்டது, வேறு எந்தப் பயன்பாட்டிற்கும் அல்ல,” என்று ஜோகூர் காவல்துறை தெரிவித்தது.

இந்தக் கொலைக்கான நோக்கம் குறித்துக் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குண்டர் கும்பல்கள் அல்லது பயங்கரவாதத்துடன் இச்சம்பவத்துக்குத் தொடர்பு இல்லை என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

தனிப்பட்ட கடன் பிரச்சனை இந்தக் கொலைக்கான நோக்கமாக இருக்கக்கூடும் என்ற சந்தேகிக்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாஜோகூர்துப்பாக்கிச் சூடு