கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள நெடுஞ்சாலைப் பாலங்களுக்கு அடியில், ஆற்றங்கரை மணல் திட்டு ஒன்றில் நீர்நாய்க் குடும்பம் ஒன்று உருண்டு விளையாடுவது, அவற்றைக் கவனிக்கும் ஒரு சில வழிப்போக்கர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.
ஒரு காலத்தில் கடுமையாக மாசுபட்டிருந்த கிள்ளான் ஆறு உட்பட நகரின் பல பகுதிகளில், சிறிய குழுக்களாக நீர்நாய்கள் இப்போது தொடர்ந்து தென்படுகின்றன.
அனைத்துலக இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால் அழிந்துவரும் அபாயத்தில் உள்ள விலங்குகளாக வகைப்படுத்தப்பட்டுள்ள அந்த வழவழப்பான ரோமங்களைக் கொண்ட நீர்நாய்கள், நகரத்திற்கு மீண்டும் திரும்பி வந்துள்ளனவா அல்லது இவ்வளவு காலமும் கண்முன்னே மறைந்திருந்தனவா என்பது குறித்துப் பல்வேறு கேள்விகள் நிலவுகின்றன.
ஆனால், அவற்றின் வருகை கிள்ளான் ஆற்றைச் சுத்தப்படுத்தும் முயற்சிகள் பலனளித்து வருவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. அதோடு, அது மேலும் பல மேம்பாடுகளுக்கு உத்வேகம் அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் மிக அசுத்தமான நீர்வழிகளில் ஒன்றாக இருந்த கிள்ளான் ஆறு, மலேசியாவின் தரவரிசைப்படி ‘பிரிவு 5’ எனப்படும் கடுமையாக மாசுபட்ட ஆறாக வகைப்படுத்தப்பட்டிருந்தது.
பல ஆண்டுகாலப் பணிகளின் விளைவாக அது ‘பிரிவு 3’ அல்லது மிதமாக மாசுபட்ட நிலைக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதுவே நீர்நாய்கள் இங்குக் குடியேறக் காரணம் என்று மலேசிய வனவிலங்குச் சூழலியல் வல்லுநர் வூ சீ யூங் தெரிவித்தார்.
