கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் பிரிக்ஃபில்ட், சேராஸ் பகுதிகளில் அண்மையில் நான்கு நாள்களுக்குள் இரு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் நிகழ்ந்தபோதிலும், கோலாலம்பூரில் பாதுகாப்பு நிலை தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள்ளும் அமைதியாகவும் இருப்பதாகக் காவல்துறை உத்தரவாதம் அளித்துள்ளது.
இரு சம்பவங்களும் தகராறு காரணமாக குறிப்பிட்ட இலக்குகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுவதாக காவல்துறைத் தலைமை ஆய்வாளர் ரஸாருதீன் ஹுசேன் புதன்கிழமை (ஜூன் 18) தெரிவித்தார்.
பாதுகாப்பு, பொது ஒழுங்கு குறித்து மக்கள் கவலைகொள்ள வேண்டியதில்லை என்று அவர் கூறினார்.
“கோலாலம்பூர் காவல்துறைத் தலைவரால் முன்னதாகக் குறிப்பிடப்பட்டதுபோல, தகராறு காரணமாக இரு சம்பவங்களும் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.
“இரு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களும் தற்செயலாக நடந்தவை அல்ல. மாறாக, அவற்றுக்குக் குறிப்பிட்ட நோக்கம் இருந்தது.
“எனவே, பொதுமக்கள் கவலையுற வேண்டியதில்லை. ஏனெனில், தலைநகரைச் சுற்றி பாதுகாப்பு தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் உள்ளது,” என்றார் திரு ரஸாருதீன்.
காவல்துறை தொடர்ந்து கட்டுப்பாட்டை மேம்படுத்தி செயல்பாடுகளைத் தீவிரப்படுத்தும் என்று அவர் உறுதியளித்தார்.
இரு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களும் சந்தேக நபர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையிலான தகராற்றுடன் தொடர்புடையதாக நம்பப்படுவதாக சினார் ஹரியான் செய்தித் தளம் முன்னதாகக் கூறியிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில், சேராசின் ஜாலான் லோக் யூவில் ஜூன் 17ல் கடைத்தொகுதிக்கு முன்னால் இரு ஆடவர்கள் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம், மலேசியாவின் சரவாக் மாநிலம், சீபுவில் கடத்தல் நடவடிக்கைகளிலிருந்து வேரூன்றியதாக நம்பப்படுவதாக கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் ருஸ்டி முகம்மது ஈசா கூறினார்.
“பிரிக்ஃபில்ட்சில் ஜூன் 13ல் நடந்த துப்பாக்கிச்சூட்டைப் பொறுத்தமட்டில், சிலாங்கூரில் நடக்கும் குற்றவியல் நடவடிக்கைகளின்போது மூண்ட மோதலிலிருந்து விளைந்ததாக நம்பப்படுகிறது,” என்றார் அவர்.

