கோலாலம்பூர் பள்ளிச் சுவர் இடிந்து விழுந்தது

1 mins read
143edebb-3cb6-47df-8ad1-3fc8e8a3ba7d
இடிபாடுகளை அகற்றும் கோலாலம்பூர் தீயணைப்பு, மீட்புத்துறை அதிகாரிகள். - படங்கள்: மலேசிய ஊடகம்

பெட்டாலிங் ஜெயா: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் புதன்கிழமை (ஏப்ரல் 23) காலை மழை பெய்ததை அடுத்து தாமான் துன் டாக்டர் இஸ்மாயில் வட்டாரத்தில் சிறிய அளவிலான நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் அங்குள்ள அனைத்துலகப் பள்ளி ஒன்றின் சுவர்களின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

இது அப்பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர்கள், அருகில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கும் காயம் ஏற்படவில்லை என்று கோலாலம்பூர் தீயணைப்பு, மீட்புத்துறை உறுதிப்படுத்தியது.

காலை 7 மணி அளவில் சுவர் இடிந்து விழுந்ததாக நம்பப்படுகிறது.

தகவல் கிடைத்ததும் கோலாலம்பூர் தீயணைப்பு, மீட்புத்துறையைச் சேர்ந்த 15 அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு வாகனங்களும் பள்ளிக் கட்டடத்தின் சில பகுதிகளும் சேதமடைந்ததாக அதிகாரிகள் கூறினர்.

அவற்றில் வகுப்பறைகள், ஆசிரியர்கள் அறை, கழிவறைகள், நூலகம் ஆகியவை அடங்கும்.

கட்டடம் பாதுகாப்பாக இருப்பதை அதிகாரிகள் உறுதிசெய்தனர்.

காலை 7.55 மணிக்கும் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இச்சம்பவம் குறித்து கோலாலம்பூர் நகர மண்டபம் விசாரணை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்