தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டம் குறித்து முடிவு எடுக்கப்படவில்லை: மலேசியா

2 mins read
4f0da2a1-38d7-4daa-a2da-099c0f274803
அதிவேக ரயில் திட்டத்தில் இடம்பெற இருந்த பண்டார் மலேசியா ரயில் நிலையம் மீதான ஓவியரின் கைவண்ணம். - படம்: எடெல்மேன்

கோலாலம்பூர்: கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டத்தை உயிர்ப்பிப்பது குறித்து இன்னும் விவாதிக்கப்படவில்லை என்று மலேசியாவின் இரண்டாம் நிதி அமைச்சர் அமிர் ஹம்ஸா அஸிஸான் தெரிவித்து உள்ளார்.

நடப்பில் உள்ள கெம்மாஸ்-ஜோகூர் பாரு (Gemas-JB EDTP) ரயில் திட்டம், ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதைத் திட்டம் போன்றவற்றின் மீது கவனம் செலுத்துவதில் அமைச்சரவை முன்னுரிமை அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

“தற்போது நடப்பில் உள்ள திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

“எனவே, கெம்மாஸ்-ஜோகூர் பாரு மற்றும் ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதைத் திட்டங்களின் மீது கவனம் செலுத்த வேண்டி உள்ளது,” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் திரு அமிர் ஹம்ஸா கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், “கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டம் மீது ஆய்வு நடத்தப்பட்டது. இருப்பினும், அது தொடர்பாக அமைச்சரவை மட்டத்திலான விவாதம் எதுவும் இதுவரை நடைபெறவில்லை. அமைச்சரவையின் முடிவுக்காகக் காத்திருக்கிறோம்,” என்றார்.

அதிவிரைவு ரயில் திட்டத்திற்கான சாத்தியம் குறித்த அமைச்சரவை முடிவுக்குப் பிறகு, ஆண்டிறுதிக்குள் அது தொடர்பாக சிங்கப்பூரிடம் பேசப்படும் என்று மலேசிய போக்குவரத்து அமைச்சர் அண்டனி லோக் இதற்கு முன்னர் கூறியிருந்தார்.

இருப்பினும், ஆண்டு நிறைவுபெற இன்னும் ஒருசில வாரங்களே எஞ்சி இருக்கும் நிலையில், அதிவேக ரயில் திட்டம் குறித்து மலேசிய அமைச்சரவை இன்னும் எதுவும் பேசவில்லை.

350 கிலோமீட்டர் தூர அதிவேக ரயில் திட்டத்தில் மலேசியா பரிந்துரைத்த சில மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்படாததால் 2021ஆம் ஆண்டு அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

அதன் பிறகு, 2022 நவம்பரில் பொறுப்பேற்ற அன்வார் இப்ராகிம் அரசாங்கம், அதிவேக ரயில் திட்டத்திற்குத் தேவைப்படும் நிதி முழுவதையும் தனியார் துறையினர் அளித்தால் அத்திட்டம் புதுப்பிக்கப்படும் என்று வெளிப்படையாகத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், திட்டம் தொடர்பாக மலேசியாவிடம் இருந்து புதிய யோசனை எதுவும் வரவில்லை என்று சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் கடந்த ஜூலையில் தெரிவித்து இருந்தார்.

குறிப்புச் சொற்கள்