கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் திடீரென ஏற்பட்ட ஆழ்குழிக்குள் பெண் ஒருவர் விழுந்ததை அடுத்து கோலாலம்பூர் வசிப்பதற்குப் பாதுகாப்பான ஓர் இடமல்ல என்று எழுந்துள்ள கூற்றை மறுத்துள்ளார் கோலாலம்பூர் மேயர் மைமுனா முகம்மது ஷரிப்.
மலேசியாவுக்குச் சுற்றுப்பயணம் சென்றிருந்த 48 வயது இந்திய நாட்டவர் விஜயலட்சுமி, ஆகஸ்ட் 23ஆம் தேதி நடந்துசென்றுகொண்டிருந்தபோது நடைபாதை திடீரென உள்நோக்கிச் சரிந்து குழிக்குள் அவரை இழுத்துவிட்டது.
அவரைத் தேடி மீட்கும் பணிகள் நான்காவது நாளாக தொடர்ந்த நிலையில், இதுவரை அவரது காலணிகள் மட்டுமே கிடைத்துள்ளன.
இந்நிலையில், சம்பவம் நடந்த இடத்திலிருந்து 69 மீட்டர் கீழ்நோக்கிச் செல்லும் இடத்தில் உள்ள சாக்கடை வாயிற்புழையில் சேர்ந்துள்ள குப்பைகள் உயர் அழுத்தத்துடன் பீய்ச்சியடிக்கப்படும் தண்ணீரால் உடைத்து வெளியேற்றப்படும் என்று ஆகஸ்ட் 26ஆம் தேதி அறிக்கை விடுக்கப்பட்டது.
மீட்புப் படையினர் ஆகஸ்ட் 26ஆம் தேதி ஆழ்குழிக்கு 50 மீட்டர் தொலைவில் இருந்த சாக்கடை வாயிற்புழையினுள் இறங்கிச் சென்றதாக ‘த நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ தெரிவித்தது.
இதற்கிடையே, சிங்கப்பூர் கழிவு மேலாண்மை நிறுவனம் ஒன்றும் இலவசமாக இந்தத் தேடி மீட்கும் பணியில் கைகொடுக்க முன்வந்துள்ளதாக மலாய் மெயில் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், 2015ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் பதிவிட்ட ஃபேஸ்புக் பதிவு ஒன்று மீண்டும் வலம்வரத் தொடங்கியுள்ளது. கோலாலம்பூரில் ‘ராட்சத ஆழ்குழி’ ஒன்று எந்நேரமும் தோன்றும் சாத்தியம் உள்ளதாக அந்தப் பதிவு கூறிற்று.
மலேசியாவில் ஆகப் பாதுகாப்பற்ற இடம் கோலாலம்பூர் என்றும் அந்நகரின் அடித்தளத்தின் 40 முதல் 60 விழுக்காடு சுண்ணாம்புக்கல்லால் ஆனது என்றும் குறிப்பிடப்பட்டது. கட்டுப்பாடற்ற முறையில் செய்யப்பட்ட மேம்பாடுகளும் ஒழுங்கற்ற வடிகால் அமைப்புகளும் இத்தகைய ஆழ்குழிகள் தோன்றும் வாய்ப்பை அதிகரிக்கச் செய்யலாம் என்றும் கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும் கோலாலம்பூர் நீண்டகாலமாகவே மேம்படுத்தப்பட்டு வருகிறது என்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள அது பாதுகாப்பற்றது என்பதற்கான நம்பகமான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்றும் டாக்டர் மைமுனா வலியுறுத்தினார்.
ஆதாரபூர்வமாக, ஆழ்ந்த ஆராய்ச்சிகளுடன் இத்தகைய கூற்றுகள் முன்வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.