வாஷிங்டன்: லத்தீன் அமெரிக்காவில் நிலத் தாக்குதல்களைத் தொடங்கப்போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியிருக்கிறார்.
எங்கு, எப்போது அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கும் என்ற விவரங்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார். சம்பந்தப்பட்ட நாடுகள் ஏதேனும் நடவடிக்கை எடுத்தால் அதிலிருந்து தப்பமுடியுமா என்பது குறித்தும் அவர் எதுவும் சொல்லவில்லை.
“நீரின் வழியாகக் கொண்டுவரப்பட்ட போதைப்பொருள்களில் 96 விழுக்காட்டை மறித்து அழித்துவிட்டோம். இப்போது நிலத்தில் தாக்குதல்களைத் தொடங்கப்போகிறோம். நிலத்தில் ராணுவத் தாக்குதல்களை நடத்துவது மிகவும் எளிது. அது விரைவில் ஆரம்பிக்கும்,” என்று திரு டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
போதைப்பொருள்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கிவிடப்போவதாகக் கொஞ்ச நாள்களாகவே அவர் கூறிவந்தார். தென்னமெரிக்கக் கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் போதைப்பொருள்களைக் கடத்திவருவதாகச் சந்தேகிக்கப்பட்ட படகுகள்மீது அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு, பல தாக்குதல்களை நடத்தியது.
வெனிசுவேலா அதிபர் நிக்கலஸ் மடுராவைத் திரு டிரம்ப் குறிவைப்பதாய்ப் பரவலாகப் பேசப்படுகிறது. அவரைப் பதவியிலிருந்து அகற்ற அமெரிக்க அதிபர் முனைகிறார் என்றும் நம்பப்படுகிறது. தற்போதைய தாக்குதல் நடவடிக்கையில் பாதிக்கப்படப்போவது வெனிசுவேலா மட்டுமன்று என்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) திரு டிரம்ப் தெரிவித்தார்.
“வெனிசுவேலா மட்டுமன்று. அமெரிக்காவுக்குள் போதைப்பொருள்களைக் கொண்டுவரும் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார் அமெரிக்க அதிபர்.
வெனிசுவேலா, வெளிநாட்டுத் தாக்குதல்களுக்கு இலக்கானால், மக்கள், அவர்களின் எதிர்ப்பைக் கிளர்ச்சியின் மூலம் வெளிப்படுத்த வேண்டும் என்று திரு மடுரோ இவ்வாரத் தொடக்கத்தில் கூறியிருந்தார்.
அமெரிக்கா ஏற்கெனவே வார ஆரம்பத்தில் வெனிசுவேலாவின் எண்ணெய்க் கப்பலொன்றைக் கைப்பற்றியது. அந்நாட்டுக்கு எதிராகப் புதிய தடைகளையும் வாஷிங்டன் அறிவித்தது. அமெரிக்கா 2019ஆம் ஆண்டிலிருந்தே வெனிசுவேலாமீது தடைகளை விதித்துவந்துள்ளது. ஆனால் அதன் பிறகு எண்ணெய்க் கப்பலை அது கைப்பற்றியது இப்போதுதான்.
தொடர்புடைய செய்திகள்
வெனிசுவேலாவின் அதிபராகத் திரு மடுரோவை டிரம்ப் நிர்வாகம் அங்கீகரிக்கவில்லை.

