கொழும்பு: இலங்கையின் வடக்கு மாநிலத்தில், ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தமிழர் நிலங்கள் முழுமையாக விரைவில் திருப்பித் தரப்படும் என்று அந்நாட்டு அதிபர் அனுரகுமார திசநாயக்க உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அதிபராக பதவி ஏற்ற பின் வடக்கு மாநிலத் தலைநகரான யாழ்ப்பாணத்துக்கு வெள்ளிக்கிழமை (ஜனவரி 31) அதிபர் திசநாயக்க முதல் முறையாகச் சென்ற அவர், யாழ்மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது , ‘‘ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழர் நிலங்கள் விரைவில் திருப்பி ஒப்படைக்கப்படும்,’‘ என்று அவர் உறுதியளித்தார்.
மக்களின் நிலங்கள் மக்களுக்கே சொந்தமாக வேண்டும் என்றும், வடக்கில் நிலவும் நிலப் பிரச்சினை குறித்து மீளாய்வு நடத்தப்பட்டு, விரைவில் நிலங்கள் மக்களிடம் திருப்பிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவுக்கு அருகிலிருக்கும் இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே நடந்த போரின்போது, 1980களில் இருந்தே தமிழர் நிலங்கள் இலங்கை அரசால் கைப்பற்றப்பட்டு, ராணுவத்தின்கீழ் கொண்டுவரப்பட்டன.
போர் முடிவுற்ற நிலையில் 2015ஆம் ஆண்டு தொடங்கி இவை படிப்படியாக மக்களிடம் திருப்பித் தரப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் அனுர குமார திசநாயக்க வெற்றி பெற்று, அதிபராகப் பொறுப்பேற்றார். அவர் பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார்.