தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எதிர்காலப் பெருந்தொற்றுகளைச் சமாளிக்க வரலாற்றுச் சிறப்பு ஒப்பந்தம்

2 mins read
5593e78c-8053-4236-92b0-28bcdbb2df71
உலக நாடுகள் சாதனை படைத்துள்ளதாக உலகச் சுகாதார நிறுவனத்தின் தலைவர் கெப்ரியேசஸ் பெருமிதத்துடன் தெரிவித்தார். - படம்: ஏஎஃப்பி

ஜெனிவா: எதிர்காலப் பெருந்தொற்றுகளை எதிர்கொள்ள உலக சுகாதார நிறுவனத்தில் மைல்கல் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இது தொடர்பாக கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு, ஒருவழியாக புதன்கிழமையன்று (ஏப்ரல் 16) ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது நடந்த சில குளறுபடிகள் மீண்டும் நிகழாதிருப்பதே ஒப்பந்தத்தின் இலக்கு.

“உலக நாடுகள் ஜெனிவாவில் இன்று சாதனை படைத்துள்ளன,” என்று உலகச் சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

உலகை மேலும் பாதுகாப்பானதாக்க இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவது சாத்தியமே என்பதை ஒப்பந்தம் உணர்த்துவதாகவும் அவர் கூறினார்.

உலக மக்களை அச்சுறுத்தும் விவகாரங்களுக்குத் தீர்வுகாண உலக நாடுகள் ஒன்றுசேர்ந்து நடவடிக்கை எடுத்திருப்பதாக திரு கெப்ரியேசஸ் தெரிவித்தார்.

பிற நாடுகளுக்கு வழங்கப்படும் நிதி உதவியை அமெரிக்கா குறைத்து, மருந்துகள் மீது வரி விதிக்கப்படும் சாத்தியம் இருந்து வரும் நிலையில் ஒப்பந்தம் தொடர்பான இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடந்தேறியது.

இத்தகைய சவால்கள் இருக்கும்போதிலும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடைசி நேரம் வரை ஒப்பந்தம் எட்டப்படுமா என்ற சந்தேகம் நிலவியது.

இதற்குச் சில விவகாரங்கள் காரணமாக இருந்தன.

பெருந்தொற்று சுகாதாரச் சாதனங்களுக்கான தொழில்நுட்பப் பகிர்வு தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோர் தடுமாறியதாகக் கூறப்படுகிறது.

கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது பணக்கார நாடுகள் தடுப்பூசிகளையும் சோதனைகளுக்குத் தேவையான சாதனங்களையும் மற்ற நாடுகளுக்குத் தராமல் பேரளவில் வைத்துக்கொண்டதாக ஏழை நாடுகள் அதிருப்திக் குரல் எழுப்பியிருந்தன.

கட்டாய தொழில்நுட்பப் பகிர்வுக்கு பேரளவிலான மருந்தியல் துறையைக் கொண்ட நாடுகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.

பரஸ்பர இணக்கத்துடன் தொழில்நுட்பங்கள் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும் என்று குறிப்பிடுவதன் மூலம் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என்று தோன்றியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இறுதியில் 32 பக்கங்களைக் கொண்ட ஒப்பந்தத்தை உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பினர்களாக இருக்கும் அனைத்து நாடுகளும் ஏற்றன.

குறிப்புச் சொற்கள்
ஒப்பந்தம்கிருமித்தொற்றுசுகாதாரம்