சாபா மாநிலத்தில் புதைகுழிச் சம்பவங்கள் அதிகரிப்பு

சாபா மாநிலத்தில் புதைகுழிச் சம்பவங்கள் அதிகரிப்பு

2 mins read
பல பத்தாண்டுகளுக்குப் பிறகு பழுதடைந்த கழிவுநீர்க் குழாய்கள் உடைந்து வருகின்றன
110ee2fc-4517-4e6b-af5e-d56178b15543
சாபாவின் சாலைகளில் அடிக்கடி புதைகுழி தோன்றுவது சாலையைப் பயன்படுத்துவோருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. - படம்: டெய்லி எக்ஸ்பிரஸ்

கோத்தா கினபாலு: சாபாவின் கழிவுநீர்க் குழாய்களில் பல 20 முதல் 30 ஆண்டுகள் பழமையானவை என்பதால் அவை சிதைந்து வருகின்றன. இதனால் புதைகுழிகள், குழாய் வெடிப்புகள், கசிவுகள் ஆகியவை ஏற்படுகின்றன. மேலும், அம்மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் முறையான சுத்திகரிப்பு அமைப்புகளுக்குப் பதிலாக, இன்னும் கழிவுநீர் தொட்டிகளையே சார்ந்துள்ளன.

“இந்தக் குழாய்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டன. தற்போது, ​​குறிப்பிட்ட சில பகுதிகளில் இருந்து கசிவுகள் மற்றும் குழாய் வெடிப்புகள் குறித்த பல புகார்களை நாங்கள் காண்கிறோம்,” என்று மாநிலக் கழிவுநீர் சேவைத் துறையின் தலைமை உதவி இயக்குநர் ஜென்னி அல்லிவியானா சுவல்லி கூறினார்.

“புதைகுழிகள் ஏற்படுவதுதான் மிகவும் மோசமான விளைவு,” என்று கூறிய அவர், சுற்றியுள்ள வசதிகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையூறு விளைவிக்காமல் பழுதுபார்ப்புகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்துத் துறை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

கடந்த வார இறுதியில் சாபா அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற இரண்டு நாள் ‘பிளம்பிங் ஆசியா 2026’ மாநாடு, கண்காட்சியில் பங்கேற்ற குழு உறுப்பினர்களில் திருவாட்டி ஜென்னியும் ஒருவர்.

அதற்கு ஆதரவளிக்க வேண்டிய கழிவுநீர் அமைப்புகளை விட, அந்தக் கட்டமைப்பு சார்ந்த தேவைகள் வேகமாக அதிகரித்து வருவதாக திருவாட்டி ஜென்னி கூறினார்.

“வளர்ச்சி இருக்கிறது, ஆனால் உள்கட்டமைப்பு இன்னும் பின்தங்கியே உள்ளது. கடந்த 20 முதல் 30 ஆண்டுகளாக நமது அமைப்புகள் மறுஆய்வு செய்யப்படாத நிலையில், வளர்ச்சியின் முன்னேற்றம் எவ்வாறு உள்ளது என்பதையும் நமது உள்கட்டமைப்பு அதற்கு ஈடுகொடுத்து எவ்வாறு உள்ளது என்பதையும் நாம் மறுபரிசீலனை செய்து ஆய்வு செய்ய வேண்டும்,” என்று அவர் கூறினார்.

மாநிலம் முழுவதும் கழிவுநீர் இணைப்பு வசதி இன்னும் குறைவாக இருப்பதால், சாபாவின் பெரும்பாலான மக்கள் தொடர்ந்து தனிநபர் கழிவுநீர் தொட்டிகளையே சார்ந்துள்ளனர்.

“இதை மையப்படுத்தப்பட்டதாகவோ, பரவலாக்கப்பட்டதாகவோ அல்லது வட்டாரமயமாக்கப்பட்டதாகவோ மாற்றுவதற்கு ஒரு பெருந்திட்டம் தீட்டுவதுதான் இந்தத் துறை செய்யக்கூடியது,” என்று அவர் கூறினார்.

இந்தத் துறை, சுற்றுச்சூழல் துறை, நீர்வளத் துறை, நீர்நிலைகளை நிர்வகிக்கும் பிற அமைப்புகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது என்றும் திருவாட்டி ஜென்னி விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்
கழிவுநீர்சுற்றுச்சூழல்புதைகுழி