லாவோஸ் குகை விபத்து: சிக்கிய 7 பேரில் 5 பேர் உயிருடன் மீட்பு

லாவோஸ் குகை விபத்து: சிக்கிய 7 பேரில் 5 பேர் உயிருடன் மீட்பு

2 mins read
3d04158f-1aee-4a58-a703-9c4a1f938d0a
லாவோஸ் நாட்டின் குகையொன்றில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகச் சிக்கியிருந்த எழுவரில் ஐவரை உயிருடன் மீட்டுள்ளது அனைத்துலக மீட்புக் குழு. - படம்: ஏஎஃப்பி

வியந்தியன்: லாவோஸ் நாட்டின் குகையொன்றில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகச் சிக்கியிருந்த 7 பேரில் ஐவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

முதல் நபர், வெள்ளிக்கிழமை (மே 29) அனைத்துலக மீட்புக் குழுவினரால் வெற்றிகரமாக உயிரோடு மீட்கப்பட்ட நிலையில், பாதிக்கு மேல் தண்ணீரில் மூழ்கிய லாவோஸ் குகைக்குள் சிக்கியிருந்தவர்களில், மேலும் நான்கு ஆண்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக மீட்புக்குழுவினர் சனிக்கிழமை (மே 30) தெரிவித்தனர்.

மரணக் குகையில் தொடரும் மீட்புப் பணி

ஸேசொம்பௌன் மாநில மலைப்பகுதியில் உள்ள குகைக்குள் தங்கம் தேடுவதற்காகச் சென்ற 7 பேர், கடந்த மே 20 முதல் பலத்த மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக வெளியேற முடியாமல் உள்ளேயே முடங்கினர். 

அவர்களை மீட்கும் பணியில் தாய்லாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த அனைத்துலக நிபுணத்துவ முக்குளிப்பாளர் குழுக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

குகையின் நுழைவாயிலில் இருந்து கிட்டத்தட்ட 300 மீட்டர் தொலைவில் உள்ள குறுகிய, உயரமான பகுதியில் ஐந்து பேர் உயிருடன் இருப்பது கடந்த புதன்கிழமை கண்டறியப்பட்டது. 

உடல் முழுவதும் சேறும் சகதியுமாகக் காணப்பட்ட நிலையில் நெஞ்சுவலி, கடுமையான பசி ஆகியவற்றால் அவர்கள் சோர்வடைந்திருந்தனர்.

நீடிக்கும் சவால்கள்

குகைக்குள் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதாலும், சேறு கலந்த தண்ணீர் உள்ளதாலும் நீருக்கடியில் எதையும் பார்க்க முடியாமல் மீட்புக் குழுவினர் கடுமையான சவால்களைச் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில்தான் தற்போது கடும் முயற்சிக்குப் பிறகு மீட்புப் பணி முன்னேற்றம் கண்டுள்ளது. “பாதிக்கப்பட்டவர்களில் நால்வர் வெளியே வந்துவிட்டனர்,” என்று மலேசிய முக்குளிப்பாளர் லீ கியன் லீ ‘மெசஞ்சர்’ செயலி வழியே ஏஎஃப்பி  செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “தண்ணீரை இறைத்து வெளியேற்றியதன் மூலம் குகைக்குள் நீர்மட்டம் குறைக்கப்பட்டது, இதனால் அவர்களால் வெளியே வர முடிந்தது,” என்றார்.

மீட்புக் குழுவில் இடம்பெற்றிருந்த தாய்லாந்து முக்குளிப்பாளர் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘மே 30 அன்று பிற்பகல் சுமார் 3.10 மணி அளவில் (சிங்கப்பூர் நேரம் பிற்பகல் 4.10 மணி) “குகைக்குள் சிக்கியிருந்த மேலும் நான்கு பேரை மீட்புப் படை அதிகாரிகளால் வெளியே கொண்டு வர முடிந்தது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்தப் பதிவில், “இதன் மூலம் இதுவரை மொத்தம் ஐந்து பேர் மீட்கப்பட்டுள்ளனர், அதேவேளையில் இன்னும் இரண்டு பேரைக் காணவில்லை” என்றும் கூறப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்