ஆஸ்திரேலியாவில் ஓயாத வெப்ப அலை; அதிகரிக்கும் காட்டுத்தீ அபாயம்

1 mins read
5e7e88e3-f0c3-4742-aba0-ee11d3f815bd
ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என அந்நாட்டு வானிலை ஆய்வு நிலையம் எச்சரித்தது. - படம்: இபிஏ

சிட்னி: ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதிகள் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 24) வெப்ப அலைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த வெப்ப அலையால் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

பெர்த் வட்டாரத்தில் டிசம்பர் மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் சராசரியாகப் பதிவாகும் வெப்பநிலையைக் காட்டிலும் 5 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பநிலை பதிவாகும்.அதாவது, அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரலாம் என்று ஆஸ்‌திரேலிய வானிலை முன்னுரைப்புகள் கூறுகின்றன.

சிட்னி மற்றும் அதற்கு அருகே இருக்கும் வடக்குப் பகுதிகளில் வெப்ப அலைகள் வீசக்கூடும் என்றும் சில பகுதிகளில் வெப்பநிலை கிட்டத்தட்ட 45 டிகிரி செல்சியஸ் வரை உயரலாம் என்றும் அந்நாட்டு வானிலை ஆய்வு நிலையம் ஞாயிற்றுக்கிழமை எச்சரித்தது.

‘எல் நினோ’ காலநிலை காரணமாக ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களை வெப்ப அலை வாட்டி வதைக்கிறது.

ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில், ஞாயிற்றுக்கிழமையன்று 20க்கும் மேற்பட்ட இடங்களில் புதர்த்தீ ஏற்பட்டது என்றும் குறிப்பாக பெர்த்திலிருந்து 320 கி.மீ. தெற்கே கிட்டத்தட்ட 5,000 பேர் வசிக்கும் பெம்பர்டன் நகரத்திற்கு அருகே ஏற்பட்டது என்றும் அந்நாட்டு அவசர சேவை நிறுவனம் கூறியது.

ஆஸ்திரேலியாவின் மேற்கில் இருக்கும் பல பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட அதிக வாய்ப்பிருப்பதாக அஞ்சப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
ஆஸ்திரேலியாகாட்டுத் தீ