தொழில்நுட்ப உலகில் தொடரும் ஆட்குறைப்பு

2 mins read
5ea38bc7-2a73-4489-a171-278f760b4c83
உலகளவில் கிட்டத்தட்ட 150,000 பேர் ஆட்குறைப்பால் பாதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. படம்: ஏஎஃப்பி -

வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துறையில் தற்போது ஆட்குறைப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிச்சயமற்ற பொருளியல் சூழலைக் கருத்தில்கொண்டு பல நிறுவனங்கள் கடந்‌த சில மாதங்களாகவே அவற்றின் ஊழியர் எண்ணிக்கையைக் குறைத்து வருகின்றன. ஊழியரணியில் புதிதாக ஊழியர்களைச் சேர்ப்பதையும் நிறுவனங்கள் நிறுத்தி வருகின்றன. தனது ஊழியரணியிலிருந்து கிட்டத்தட்ட 1,000 ஊழியர்கள் ஆட்குறைப்புக்கு ஆளாகவிருப்பதாக பிப்பரவரி 9ஆம் தேதி 'யாகூ' நிறுவனம் அறிவித்தது. உணவு விநியோக நிறுவனமான 'டெலிவரூ'வும் அதன் தொழில்நுட்ப அணியில் இருந்து ஏறக்குறைய 350 பேரை வெளியேற்றியது. 'வால் ஸ்திரீட் ஜர்னல்' நாளிதழை நிர்வாகம் செய்யும் நியூஸ் கார்ப் நிறுவனம் 1,250 பேரை நீக்கியது. உலகளவில் கிட்டத்தட்ட 150,000 பேர் ஆட்குறைப்பால் பாதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது, ஆட்குறைப்பு மேலும் தொடரும் என்றும் அஞ்சப்படுகிறது.

அண்மையில் சில முன்னணி நிறுவனங்கள் மேற்கொண்ட ஆட்குறைப்பு எண்ணிக்கை:

♦ மைக்ரோசாஃப்ட் : 10,000 ♦ கூகல் : 12,000 ♦ மெட்டா: 11,000 ♦ அமேசான்: 18,000 ♦ பேபால்: 2,000 ♦ சேல்ஸ்ஃபோர்ஸ்: 7,000 ♦ ஐபிஎம்: 3,000 ♦ டெல்: 6,650 ♦ டிஸ்னி: 7,000 ♦ டுவிட்டர்: 3,700

இந்நிலையில் சிங்கப்பூரில் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஊழியருக்கான தேவை அதிகமாக உள்ளதாக தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ கடந்த வாரம் கூறியிருந்தார்.

சிங்கப்பூர் அதன் ஊழியர்களின் திறன்களைக் காலத்திற்கு ஏற்ப வளர்த்துக்கொள்ள தொடர்ந்து உதவிகளை வழங்கிவருவதாகவும் அவர் கூறினார்.

2016ஆம் ஆண்டு முதல் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் தொழில்நுட்பத்திறன் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் 13,000க்கும் மேற்பட்டோர் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைக்குச் சேர்ந்துள்ளதாகவும் திருவாட்டி டியோ குறிப்பிட்டார்.