தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியாவில் மருந்து விலையை வெளிப்படுத்த விதிமுறை: மருத்துவர்கள் எதிர்ப்பு

1 mins read
fff6bb10-5291-4aed-a7b8-2a338c18532b
படம்: - ராய்ட்டர்ஸ்

கோலாலம்பூர்: மலேசியாவில் மருந்துகளின் விலை, அனைவருக்கும் தெரியும் வகையில் வெளிப்படையாகக் கண்ணுக்குத் தென்படும் வகையில் காட்டப்படவேண்டும் என்ற விதிமுறையை அரசாங்கம் அறிவித்திருந்தது.

அந்த விதிமுறைக்கு அந்நாட்டின் தனியார் மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக மலாய் மெயில் ஊடகம் குறிப்பிட்டுள்ளது. மருந்து விலையை அவ்வாறு வெளிப்படையாகத் தெரியப்படுத்துவது நோயாளிகளுக்கு அபாயம் விளைவிக்கலாம் என்றும் சுகாதாரப் பராமரிப்புச் செலவை அதிகரிக்கக்கூடும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அதோடு, அந்த விதிமுறை, மருத்துவர்களை சில்லறை வர்த்தகர்களாக ‘மாற்றிவிடும்’ என்றும் அவர்கள் அஞ்சுகின்றனர்.

வரும் மே மாதம் ஒன்றாம் தேதி புதிய விதிமுறை நடப்புக்கு வருகிறது. மருந்துகளின் விலையை வெளிப்படையாகக் கண்ணுக்குத் தெரியும் வகையில் தெரியப்படுத்துவதால் மருத்துவர்கள் சில்லறை வர்த்தகர்களாக மாறும் அபாயம் இருப்பதாகவும் நோயாளிகள் உட்கொள்ளவேண்டிய மருந்துகளுக்கான சீட்டுகளை (prescriptions) வழங்கும் முறைக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் மலேசிய தனியார் மருத்துவர் சங்கங்களுக்கான சம்மேளனம் கூறியுள்ளது.

மருந்துகள், நிபுணர்களின் ஆலோசனையுடன் வழங்கப்படும் கட்டுப்படுத்தப்பட்ட பொருள்கள்; புதிய விதிமுறையோ, அவற்றைக் கடைகளில் எளிதில் வாங்கக்கூடிய பொருள்களாக வகைப்படுத்துகிறது என்று சம்மேளனத்தின் தலைவர் சண்முகநாதன் டிவி கணேசன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

திரு சண்முகநாதன் டிவி கணேசன், மருந்து விலையை தங்கம், கோழி இறைச்சி விலை போன்றவற்றுடன் மலேசிய உள்ளூர் வர்த்தக, வாழ்க்கைச் செலவின அமைச்சர் ஒப்பிட்டதைச் சாடினார். அமைச்சர் பேசியது, சிக்கலான ஒரு விவகாரத்தைப் பெரிதும் எளிமைப்படுத்தும் செயலாகும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்