கோலாலம்பூர்: வன்போலிகள், ஆள்மாறாட்டம், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட குழந்தைகளின் ஆபாசப் படங்கள் உள்ளிட்ட, ‘ஏஐ’ சார்ந்த குற்றங்களைக் கையாள்வதற்காக, தற்போதுள்ள சட்டங்களை வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக மலேசிய மின்னிலக்கத்துறை அமைச்சர் கோபிந்த் சிங் தியோ தெரிவித்தார்.
சில குற்றங்களுக்கு, குறிப்பாக குழந்தைகள் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்கு, மலேசியாவில் ஏற்கெனவே சட்டப் பாதுகாப்புகள் உள்ளன என்று கூறிய அவர், செயற்கை நுண்ணறிவு தொடர்பான வளர்ந்து வரும் அபாயங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் சட்டக் கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
“நமது நாட்டில், குறிப்பிட்ட துறைகளைக் கருத்தில் கொள்ளும் அமைப்புகள் அல்லது பாதுகாப்பு வழிமுறைகள் ஏற்கெனவே உள்ளன. உதாரணமாக, குழந்தைகளைப் பொறுத்தவரை, குற்றவியல் சட்டங்கள் ஏற்கெனவே உள்ளன.
“செயற்கை நுண்ணறிவின் விளைவாக எழக்கூடிய, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான சம்பவங்கள் போன்ற, குழந்தைகளைத் தவறாகப் பயன்படுத்தும் சூழ்நிலைகளை நாம் கையாளும் விதத்தைத்தான் வலுப்படுத்த வேண்டும்,” என்று அவர் திங்கட்கிழமையன்று (ஜூன் 22) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு உருவாக்கத்தின்போது பாதுகாப்பு அம்சங்களை அவற்றில் இணைப்பது மற்றும் மீறல்கள் ஏற்படும்போது அமலாக்கத்தை வலுப்படுத்துவது ஆகிய இருமுனை அணுகுமுறையை அரசாங்கம் பின்பற்றுகிறது என்று அமைச்சர் கூறினார்.
“முதலாவதாக, தவறாகப் பயன்படுத்துதல் அல்லது பாலியல் ரீதியான தவறான உள்ளடக்கம் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் வெளியீடுகளைத் தடுக்க, செயற்கை நுண்ணறிவு தொடக்கத்திலிருந்தே ஒரு பாதுகாப்புக் கட்டமைப்பிற்குள் உருவாக்கப்பட வேண்டும்.
“இரண்டாவதாக, செயற்கை நுண்ணறிவு வெளியீடுகள் சட்டத்தை மீறும் நடவடிக்கைகள் இன்னும் இருக்கும் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். மேலும் அத்தகைய சந்தர்ப்பங்களில், செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்களைக் கையாள்வதற்காகத் தற்போதுள்ள சட்டங்கள் வலுப்படுத்தப்பட்டு, விரிவுபடுத்தப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.
இந்த அணுகுமுறை, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை மலேசியா ஒழுங்குபடுத்துவதை உறுதிசெய்யும் அதே வேளையில், செயற்கை நுண்ணறிவு தொடர்பான குற்றங்களைத் தற்போதைய சட்ட அமைப்பின்கீழ் விசாரிக்கவும் வழக்கு தொடரவும் அனுமதிக்கும் என்று அமைச்சர் கோபிந்த் சிங் கூறினார்.

