சொத்துகளை முழுமையாக அறிவிக்கவில்லை: மலேசிய முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி மீது வழக்கு

சொத்துகளை முழுமையாக அறிவிக்கவில்லை: மலேசிய முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி மீது வழக்கு

2 mins read
d16c95bb-d52d-41a9-a3fd-3cf48647a768
தம்மீது சுமத்தப்பட்டுள்ளக் குற்றச்சாட்டை இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மறுத்து, விசாரணை கோரியுள்ளார். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் தமது சொத்து விவரங்களை முழுமையாக அறிவிக்கத் தவறிய குற்றச்சாட்டின் பேரில், மலேசிய முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் மீது வியாழக்கிழமை (ஆகஸ்ட் 27) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

66 வயது இஸ்மாயில் சப்ரி, செஷன்ஸ் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்ட இந்தக் குற்றச்சாட்டை மறுத்து, விசாரணை கோரியுள்ளார்.

அவர் தமக்குச் சொந்தமான உள்ளூர் மற்றும் ஒன்பது வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் ஐந்து தங்கக் கட்டிகளை ஊழல் தடுப்பு ஆணையத்திடம் முறையாக அறிவிக்கத் தவறினார் என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் அறிவிக்கத் தவறிய தொகையில் 14.7 மில்லியன் ரிங்கிட், 6 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி, 1.46 அமெரிக்க டாலர், 3 மில்லியன் சுவிஸ் ஃபிராங்க், 12 மில்லியன் யூரோ, 360 மில்லியன் ஜப்பானிய யென், 50,250 பிரிட்டிஷ் பவுண்ட், 44,600 நியூசிலாந்து டாலர், 34 மில்லியன் ஐக்கிய அரபு சிற்றரசுகள் டிர்ஹம் மற்றும் 352,850 ஆஸ்திரேலிய டாலர் ஆகியவை அடங்கும்.

இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் 100,000 மலேசிய ரிங்கிட் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதியன்று இஸ்மாயில் சப்ரியிடம் வழக்கப்பட்ட ஊழல் தடுப்பு ஆணையத்தின் உத்தரவுக்கு இணங்க, அவர் 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7ஆம் தேதியன்று புத்ராஜாயாவிலுள்ள ஆணையத் தலைமையகத்தில் அளித்த எழுத்துபூர்வ அறிக்கை, சட்ட விதிகளுக்கு உட்பட்டு அமையவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இஸ்மாயில் சப்ரி 300,000 ரிங்கிட் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவரது கடப்பதிழைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்று அரசாங்க வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டிருந்தனர். அதற்கு இஸ்மாயில் சப்ரி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அவரது கடப்பிதழைப் பறிமுதல் செய்யத் தேவையில்லை என்று நீதிபதி தெரிவித்தார்.

இந்த வழக்கு மீண்டும் செப்டம்பர் மாதம் 29ஆம் தேதியன்று விசாரணைக்கு வரும்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாவழக்குகுற்றச்சாட்டுபிரதமர்