கோலாலம்பூர்: மலேசியாவின் முஸ்லிம் புனிதப் பயண நிதியமான ‘தபூங் ஹாஜி’ அமைப்பின் முன்னாள் தலைவரான 60 வயது அப்துல் அசீஸ் அப்துல் ரஹீம், 12 ஆண்டுகளுக்கு முன்பு தமது பதவியைப் பயன்படுத்தி ஆண்டுக்கு 690,000 ரிங்கிட் (S$216,000) சம்பளத்தில் நிறுவனம் ஒன்றின் தலைவர் பதவியைப் பெற்றதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்து, விசாரணை கோரியுள்ளார்.
புதன்கிழமையன்று (செப்டம்பர் 9) நீதிபதி அஸூரா அல்வி முன்னிலையில் அழைத்துவரப்பட்ட அஸீஸ், குற்றச்சாட்டை மறுத்தார்.
தபூங் ஹாஜி அமைப்பின் தலைவராக இருந்த காலத்தில், அசீஸ் புத்ராஜாயா பெர்டானா பெர்ஹாட் நிறுவனத்தில் ஆண்டுக்கு 690,000 ரிங்கிட் ஊதியம், சொகுசு கார் மற்றும் நிரந்தர ஓட்டுநர் ஆகிய பலன்களைப் லஞ்சமாகப் பெறத் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், அந்த நிறுவனத்தில் தமக்கு இருந்த சொந்த விருப்பங்களின் அடிப்படையில், அதில் 193.5 மில்லியன் ரிங்கிட் வரை (நிறுவனத்தின் அப்போதைய பங்குகளின் மூலதனத்தில் 30 விழுக்காடு வரை) முதலீடு செய்யக் கோரும் பரிந்துரையைச் சமர்ப்பிக்குமாறும் அதைத் தபூங் ஹாஜி வாரியக் கூட்டத்தில் ஒப்புக்கொள்ள வைக்குமாறும் அன்றைய தபூங் ஹாஜி வாரியத் தலைமை நிர்வாக அதிகாரி இஸ்மி இஸ்மாயிலுக்கு அவர் உத்தரவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தக் குற்றம், 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதியன்று ஜாலான் துன் ரசாக்கில் உள்ள தபூங் ஹாஜி கட்டடத்தின் வாரியக் கூட்ட அறையில் புரியப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின்கீழ் சுமத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டுக்குத் தண்டனை விதிக்கப்படலாம். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் பெறப்பட்ட லஞ்சப் பணத்தைவிட குறைந்தபட்சம் ஐந்து மடங்கு அபராதமும் அல்லது 10,000 ரிங்கிட் (எது அதிகமோ) அபராதமும் விதிக்கப்படலாம்.

