கோலாலம்பூர்: தீங்கிழைக்கும் உள்ளடக்கம் தொடர்பான மலேசியச் சட்டங்களை இணையத் தளங்கள் பின்பற்றுவதை உறுதிசெய்யவே கூகல் நிறுவனத்திற்கு எதிராக 600 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரும் இரு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
மலேசியத் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபட்சில் அதனைத் தெரிவித்தார். அந்தச் சட்ட நடவடிக்கை தனிநபர் ஒருவருக்காக மட்டுமே எடுக்கப்பட்டதாக வெளியான ஊடகச் செய்திகள் தவறானவை என்றார் அவர்.
இணையப் பாதுகாப்புச் சட்டம் 2025இன்கீழ் மோசடி, இணையச் சூதாட்ட உள்ளடக்கங்களைக் குறித்த காலத்திற்குள் யூடியூப் தளத்திலிருந்து கூகல் நீக்கத் தவறியதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
இணையச் சூதாட்டம் தொடர்பான 74,569 உள்ளடக்கங்களை நீக்குமாறு மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையம் யூடியூப் தளத்திடம் கேட்டது. ஆனால், 32,781 மட்டுமே ஒரு நாளுக்குள் நீக்கப்பட்டன. மீதமுள்ளவை நீக்கப்பட 90 நாள்களுக்கும் மேல் ஆனது. 4,950 உள்ளடக்கங்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மலேசிய அரசியார் சாரித் சோஃபியா பெயரில் உருவாக்கப்படும் போலிக் கணக்குகளை நீக்கப் பிற தளங்களும் தொடர்ந்து தவறி வருகின்றன. எனவே, ஆணையத்தின் சட்ட நடவடிக்கை நியாயமானது என்றார் திரு ஃபாஹ்மி.
