மலேசியாவில் தலைமறைவான வழக்கறிஞர் லிம் தியன்: $45,000 பிணைத்தொகை பறிமுதல்

மலேசியாவில் தலைமறைவான வழக்கறிஞர் லிம் தியன்: $45,000 பிணைத்தொகை பறிமுதல்

கோப்புப் படங்கள்: சாவ்பாவ்

17 Sep 2026 - 7:37 pm

2 mins read

சமூக-அரசியல் வலைப்பதிவரான லியோங் சே ஹியன், வழக்கறிஞர் லிம் தியனுக்காகப் பிணையாகச் செலுத்திய $45,000 முழுவதையும் பறிமுதல் செய்யும்படி நீதிமன்றம் வியாழக்கிழமை (செப்டம்பர் 17) உத்தரவிட்டுள்ளது.

தாம் பிணைப் பொறுப்பைச் சரிவர நிறைவேற்ற முயன்றதாகவும் லிம் தப்பி ஓடுவார் என நம்பத் தமக்கு எந்தக் காரணமும் இருக்கவில்லை என்றும் 72 வயது லியோங் வாதாடினார். மேலும், நீதிமன்றம் தமது தனிப்பட்ட வாழ்க்கைச் சூழலைக் கருத்தில் கொள்ளவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். தமது உடல்நிலை, தமது மனைவிக்கு நடந்த அறுவை சிகிச்சைகள் போன்றவற்றை அவர் சுட்டினார்.

எனினும், லியோங் தமது பிணைப் பொறுப்புகளைச் சரிவர நிறைவேற்றத் தவறிவிட்டதாக நீதிபதி தெரிவித்தார்.

லிம் சட்டவிரோதமாகச் சிங்கப்பூரை விட்டு வெளியேற உடந்தையாக இருந்ததாக இரு ஆடவர்கள்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முன்னதாக, சான்றிதழ் இன்றி வழக்கறிஞராகப் பணியாற்றிய வழக்கில் விதிக்கப்பட்ட மூன்று மாதச் சிறைத்தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஆகஸ்ட் 3ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் லிம் தியன் மலேசியாவுக்குத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

பின்னர் மலேசியக் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட லிம், சிங்கப்பூர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுத் தற்போது சிறைத்தண்டனையை நிறைவேற்றி வருகிறார்.

மக்கள் குரல் கட்சியைத் தோற்றுவித்தவரும் சீர்திருத்தத்துக்கான மக்கள் கூட்டணியின் தலைமைச் செயலாளருமான லிம் தியன், 2025ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் பொத்தோங் பாசிர் தனித்தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார்.

2020ல் அப்போதைய பிரதமராகப் பதவி வகித்த திரு லீ சியன் லூங் மீதான அவதூறு வழக்கில் லியோங்கை லிம் பிரதிநிதித்தார். அவ்வழக்கில் தோல்வியுற்ற லியோங் திரு லீக்கு $133,000 இழப்பீடு செலுத்த உத்தரவிடப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
வழக்கறிஞர்பிணைபறிமுதல்தலைமறைவு