அமெரிக்க உளவுத்துறையில் ஆட்குறைப்பு

அமெரிக்க உளவுத்துறையில் ஆட்குறைப்பு

படம்: ஏஎஃப்பி

11 Jul 2026 - 7:21 pm

1 mins read

வாஷிங்டன்: அமெரிக்கத் தேசிய உளவுத்துறையின் தற்காலிக இயக்குநர் பில் புல்டே, தமது அமைப்பில் மூன்றாவது கட்ட ஆட்குறைப்பு நடவடிக்கையை வெள்ளிக்கிழமையன்று (ஜூலை 10) அறிவித்தார். உளவுத்துறையின் அளவைக் குறைக்குமாறு அண்மைய வாரங்களில் அதிபர் டோனல்ட் டிரம்ப் வலியுறுத்தியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தங்களது அமைப்பு முன்னெப்போதையும்விட மிகவும் திறம்படச் செயல்பட்டு வருவதாகவும் தேவையற்ற அல்லது முக்கியமற்ற பணிகளில் உள்ள ஊழியர்களைக் குறைக்கும் மூன்றாம் கட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளதாகவும் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் புல்டே குறிப்பிட்டுள்ளார். எனினும், எத்தனை பணியாளர்கள் நீக்கப்படவுள்ளனர் என்ற விவரம் அதில் தெரிவிக்கப்படவில்லை.

2025ஆம் ஆண்டு ஜனவரியில் அதிபர் டிரம்ப் பதவியேற்றதில் இருந்து, வீண் செலவு மற்றும் மோசடிகளைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி அமெரிக்க அரசாங்க அமைப்புகளை மாற்றிமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

ஆனால், இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகள் அரசாங்கத்தின் முக்கியப் பணிகளைப் பாதிக்கும் என்று அரசியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். தேசிய பாதுகாப்புத் துறையில் எவ்வித முன்னனுபவமும் இல்லாத பில் புல்டே தற்காலிகத் தலைவராக நியமிக்கப்பட்டது, அதிபர் டிரம்ப்பிற்கு அரசியல் ரீதியாகப் பெரும் எதிர்ப்பைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

திரு புல்டே அதிபர் டிரம்ப்புக்கு நெருக்கமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அமெரிக்காவின் தேசிய உளவுத்துறையின் இயக்குநராக இருந்த துளசி கப்பார்ட் கடந்த ஜூன் 19ஆம் தேதியன்று பதவி விலகினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்