லண்டன்: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் தாங்கள் செய்யும் வேலைகளைச் செய்துமுடிக்கும் என்று ஐந்தில் நான்கு ஊழியர்கள் நம்புகிறார்கள்.
இதனால், தங்களது வேலை இடங்கள் ஆட்குறைப்பு மூலம் பாதிக்கப்படலாம் என்று இளம் ஊழியர்கள் அஞ்சுகின்றனர். அதேபோல், நிறுவனங்கள் ‘ஏஐ சேட்பாட்ஸ்’ உள்ளிட்டவற்றை அதிகமாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டதால் இளையர்களின் கவலை மேலும் அதிகரித்துள்ளது.
மிகப்பெரிய ஆட்சேர்ப்பு முகவர் நிறுவனமான ரேன்ஸ்டாண்ட் (Randstad) இந்த ஆய்வை நடத்தியது. ஆண்டுக்கு ஒருமுறை இதுபோன்ற ஆய்வை நிறுவனம் நடத்துகிறது.
இந்த ஆய்வில் 27,000 ஊழியர்கள் மற்றும் 1,225 நிறுவனங்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அதேபோல் 35 வேலைச் சந்தைகளில் உள்ள 3 மில்லியனுக்கும் அதிகமான வேலை விளம்பரங்களையும் ரேன்ஸ்டாண்ட் ஆராய்ந்து தகவல் வெளியிட்டது.
‘ஏஐ ஏஜெண்ட்’ (AI agent) என்னும் திறனைக் குறிப்பிட்டு வேலைக்கு ஆள் தேவை என்று நிறுவனங்கள் விளம்பரப்படுத்தி வருகின்றன. அந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 1,587 விழுக்காடு கூடியது.
ஏஐ, தானியங்கி தொழில்நுட்பங்கள் சிறுசிறு வேலைகளைச் செய்யத் தொடங்கிவிட்டதால் அவற்றுக்கான வேலை ஆள்கள் தேவையில்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

