நியூயார்க்: நியூயார்க்கில் இந்த வாரம் தொடங்கும் ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் திரள்கின்றனர்.
மத்திய கிழக்கில் விரிவடைந்து வரும் மோதல், ரஷ்யா-உக்ரேன் போர், செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் ஆபத்துகள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய அனைத்துலக அமைதியும் ஒழுங்கும் பெருஞ்சவால்களை எதிர்கொண்டுள்ள வேளையில், ஏறக்குறைய 130 நாடுகளின் தலைவர்கள் இந்த உயர்மட்டக் கூட்டத்தில் ஒன்றுகூடுகின்றனர்.
ஐநாவிற்கான நிதிப் பங்களிப்பைக் கணிசமாகக் குறைத்தும் பல்வேறு ஐநா அமைப்புகளிலிருந்து விலகியும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தொடர்ந்து நெருக்குதல் அளித்து வருகிறார்.
இந்தச் சூழலில் சீன அதிபர் ஸி ஜின்பிங் நியூயார்க் பயணத்தைத் தவிர்த்துக்கொண்டு, வியாழக்கிழமை (செப்டம்பர் 24) வாஷிங்டனில் திரு டிரம்ப்பை நேரடியாகச் சந்தித்துப் பேசவுள்ளார். இது, அனைத்துலகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஐநாவின் முக்கியத்துவம் குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது.
அதேவேளையில், ஐநாவின் அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தற்போதைய தலைமைச் செயலாளர் அண்டோனியோ குட்டரெசின் பதவிக்காலம் 2026 இறுதியில் முடிவடைகிறது.
இந்நிலையில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மனிதக் கட்டுப்பாட்டை மீறி பேரழிவை ஏற்படுத்தாமல் தடுக்க அனைத்துலக அளவிலான பொதுவான கட்டுப்பாட்டு விதிகளை வகுக்க வேண்டும் என்று திரு குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய கிழக்கில் அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான இடையிலான போர் உலக அளவில் பணவீக்கத்தை அதிகரித்து வட்டார அமைதியைச் சீர்குலைத்து வருகிறது.
பாப் எல்-மண்டேப் நீரிணையில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் முன்னேற்றம் அனைத்துலகக் கப்பல் போக்குவரத்திற்குப் பேரச்சுறுத்தலாக மாறியுள்ளது.
பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அபாசுக்கு அமெரிக்கா விசா வழங்க மறுத்ததால், இக்கூட்டத்தில் அவரால் நேரில் பங்கேற்க முடியாது. எனவே, அவர் காணொளி வழியாக உரையாற்ற ஐநா பொதுச்சபை ஒப்புதல் அளித்துள்ளது.
