மலேசிய நீதித்துறையில் தலைமைத்துவ வெற்றிடம்

2 mins read
6040888f-06c7-45f6-a742-535f901c98c2
மலேசியாவின் தலைமை நீதிபதி பதவியிலிருந்து துங்கு மைமுன் துவான் மாட் பணி ஓய்வுப்பெற்றார். - படம்: பிக்சாபே

கோலாலம்பூர்: மலேசிய நீதித்துறையில் தலைமைத்துவ வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. மலேசியாவின் தலைமை நீதிபதி மைமுன் துவான் மாட் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) பணி ஓய்வுபெற்றார்.

அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்படாததை அடுத்து, மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமுக்கு எதிராக அதிருப்திக் குரல்கள் எழுந்துள்ளன.

நீதித்துறையில் அவர் தலையிடுகிறார் என்றும் சிலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாகத் திரு அன்வாரைச் சாடியோரில் அவருக்கு நெருக்கமான சிலரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்ராஜெயாவில் தமது அலுவலகத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற திருவாட்டி மைமுன், தமது பதவிக்காலம் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்.

மலேசியச் சட்டப்படி, ஒய்வுபெறும் தலைமை நீதிபதியின் பதவிக்காலத்தை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கலாம்.

திருவாட்டி மைமுன் பணி ஒய்வுபெற்ற அதே நாளன்று, கூட்டரசு நீதிமன்றத்தில் அவரது நேர்மையையும் நீதித்துறை சுதந்திரமாகச் செயல்பட்டதற்கு அவர் பங்காற்றியதற்கும் மலேசிய வழக்கறிஞர் சங்கத்தின் துணைத் தலைவர் ஆனந்த் ராஜ், முன்னாள் சட்டத்துறைப் பேராசிரியர் குர்தியால் சிங் உட்பட மூத்த வழக்கறிஞர்கள் புகழாரம் சூட்டினர்.

“உங்கள் தலைமைத்துவத்தின்கீழ், நீதித்துறையின் நம்பகத்தன்மை மீண்டது. காமன்வெல்த் நாடுகளிடையிலான ஆகச் சிறந்த நீதித்துறைக்கு ஈடாக மலேசிய நீதித்துறை திகழ்ந்தது,” என்றார் திரு குர்தியால் சிங்.

திருவாட்டி மைமுன் பணி ஓய்வுபெறுவதற்கு ஒரு சில வாரங்கள் இருந்தபோது, அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்படாதது குறித்தும் அவருக்குப் பதிலாக யார் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார் என்று அறிவிக்கப்படாதது குறித்தும் மலேசிய வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள் மத்தியில் சலசலப்பு எழுந்தது.

மலேசியாவின் ஆக உயரிய நீதிமன்றத்தின் ஒன்பது உறுப்பினர்களில் திருவாட்டி மைமுனும் ஒருவர். அவருக்கு அடுத்ததாக இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலையில் இருந்த நீதிபதிகளும் அந்த ஒன்பது பேரில் அடங்குவர்.

அவர்களில் ஒருவர் பதவி ஒய்வுபெற்றுவிட்டார். மற்றொருவர் இன்னும் ஏழு மாதங்களில் பதவி ஓய்வுபெற இருக்கிறார்.

2024ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து இரண்டு புதிய நீதிபதிகள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, கூட்டரசு நீதிமன்றத்தில் ஆறு நீதிபதிகள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலை ஏற்படக்கூடும் என்று கூறப்படுகிறது.

அவர்களில் பெரும்பாலானோர் அண்மைக் காலத்தில் நியமிக்கப்பட்டவர்கள்.

குறிப்புச் சொற்கள்