5,000 பேரை ஆட்குறைப்பு செய்யத் திட்டமிடும் முன்னணி வங்கி

1 mins read
417634a6-488d-4310-904a-4d5831a26a45
ஏஎன்ஸி வங்கிக் குழுமத்தில் ஏறக்குறைய 42,000 பேர் பணிபுரிகின்றனர் - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

சிட்னி: முன்னணி வங்கிகளில் ஒன்றான ஏஎன்ஸி (ANZ) வங்கிக் குழுமமானது ஏறக்குறைய 5,000 பணியிடங்களை நீக்குவது குறித்து ஆலோசனை செய்துவருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

எத்தனை பேரை ஆட்குறைப்பு செய்வது என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் ஆயினும் சில்லறைச் சேவைத் துறையில் 2,000 பேர் நீக்கப்படலாம் என்றும் அதுகுறித்து தகவலறிந்த இருவரைச் சுட்டி ‘கேப்பிட்டல் பிரீஃப்’ செய்தி வெளியிட்டுள்ளது.

தொழில் குறித்த உத்திமுறை மறுஆய்வு இடம்பெற்று வருகிறது என்றும் மாற்றம் ஏதேனும் இருப்பின் அதுபற்றி அக்டோபர் மாத நடுப்பகுதியில் தெரிவிக்கப்படும் என்றும் ஏஎன்ஸி பேச்சாளர் கூறியதாக புளூம்பர்க் செய்தி தெரிவிக்கிறது.

இதனிடையே, ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரைத் தளமாகக் கொண்ட அவ்வங்கி தான் முன்னுரிமை அளிக்காத பணிகளுக்கான ஆதரவை நிறுத்தவும் முடிவுசெய்துள்ளது.

முன்னதாக, ஆட்குறைப்பு குறித்து நேரடியாகத் தெரிவிப்பதற்கு முன்பே ஊழியர்கள் சிலருக்கு அதுதொடர்பான மின்னஞ்சல் தவறாக அனுப்பப்பட்டுவிட்டது. அதற்காகக் கடந்த வாரம் ஏஎன்ஸி தலைமை நிர்வாகி மன்னிப்பு கோரினார்.

ஏஎன்ஸி வங்கிக் குழுமத்தில் ஏறக்குறைய 42,000 பேர் பணிபுரிகின்றனர். அவர்களில் 10,800 சில்லறைச் சேவைத் துறையினர் என்று அந்நிறுவனத்தின் ஆக அண்மைய ஆண்டறிக்கை தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்