தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மூன்று மாதங்களில் 11,000 ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பிய முன்னணி நிறுவனம்

2 mins read
இனியும் தொடரும் என எச்சரிக்கை
c752a80e-a6e2-4048-b9e3-eccd561e6e9e
ஆட்குறைப்பால் அக்சென்சர் நிறுவனம் ஒரு பில்லியன் அமெரிக்க டாலருக்குமேல் சேமிக்க முடியும் எனச் சொல்லப்படுகிறது. - படம்: ஊடகம்

உலகின் முன்னணித் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான அக்சென்சர் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 11,000க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.

செயற்கை நுண்ணறிவை (ஏஐ) விரைந்து தழுவுவதும் பெருநிறுவனங்களுக்கான சேவைத் தேவை குறைந்து வருவதுமே அதற்குக் காரணம் என அந்நிறுவனம் குறிப்பிட்டது.

அத்துடன், 865 மில்லியன் அமெரிக்க டாலர் (S$1.118 பில்லியன்) மதிப்பிலான நிறுவன மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகவும் ஆட்குறைப்பு நடவடிக்கை இடம்பெற்றதாக அது உறுதிப்படுத்தியது.

அடுத்துவரும் மாதங்களிலும் ஆட்குறைப்பு தொடரலாம் என அந்நிறுவனம் எச்சரித்திருக்கிறது.

“எங்களுக்குத் தேவைப்படும் திறன்களுக்கு, திறன்மேம்பாடு சாத்தியமில்லாத நிலையிலேயே ஆட்குறைப்பு மேற்கொள்ளப்படுகிறது,” என்று அக்சென்சர் தலைமை நிர்வாக அதிகாரி ஜூலி ஸ்வீட் தெரிவித்துள்ளார்.

தங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான ஏஐ சார்ந்த தீர்வுகளுக்கு ஏற்ற வகையில் ஊழியரணி விரைந்து மாற்றியமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

2025 ஆகஸ்ட் மாத இறுதி நிலவரப்படி, அக்சென்சர் நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் 779,000 ஊழியர்கள் இருந்தனர். அதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு அந்த எண்ணிக்கை 791,000ஆக இருந்தது.

இவ்வாண்டுத் தொடக்கத்தில் தொடங்கிய ஆட்குறைப்பு நடவடிக்கை வரும் நவம்பர் மாதம் வரையிலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்குறைப்பால் அந்நிறுவனம் ஒரு பில்லியன் அமெரிக்க டாலருக்குமேல் சேமிக்க முடியும் எனச் சொல்லப்படுகிறது.

ஒருபக்கம் ஆட்குறைப்பு இடம்பெற, மறுபக்கம் ஊழியர்களின் திறன்மேம்பாட்டிலும் அக்சென்சர் கவனம் செலுத்தி வருகிறது. தனது ஊழியர்களுக்கு ‘ஏஜென்டிக் ஏஐ’ எனும் தானியக்கச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் குறித்து அந்நிறுவனம் பயிற்சியளிக்கத் தொடங்கியுள்ளது. சிக்கலான பணிகளைத் தானியக்கமாக்கும் புதிய தொழில்நுட்பம் அது.

ஆட்குறைப்பிற்கு இடையிலும், ஆண்டு அடிப்படையில் 2025 மூன்றாம் காலாண்டில் அக்சென்சரின் வருவாய் ஏழு விழுக்காடு கூடி, 17.6 பில்லியன் டாலரை எட்டியது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்