நியூ ஆர்லியன்ஸ்: அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலமான லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புதன்கிழமை (ஜனவரி 1) ‘டிரக்’ வாகனம் ஒன்று கூட்டத்தின்மீது மோதியதில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாகவும் 35 பேர் காயமுற்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சந்தேக ஆடவருக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் அவர் கொல்லப்பட்டதாக மத்திய புலனாய்வுப் பிரிவு வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவித்தது.
இச்சம்பவம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 3.15 மணியளவில் (சிங்கப்பூர் நேரப்படி மாலை 5.15 மணி) நிகழ்ந்ததாக அதிகாரிகள் கூறினர்.
போர்பன் ஸ்திரீட்டில் வேகமாகச் சென்ற லாரி ஒன்று கூட்டத்தின்மீது மோதியதைத் தொடர்ந்து, அதிலிருந்து வெளியேறிய ஓட்டுநர் துப்பாக்கியால் சுட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்களை மேற்கோள்காட்டி சிபிஎஸ் நியூஸ் தெரிவித்தது.
காவல்துறையினர் அந்த ஆடவரைத் திருப்பிச் சுட்டதாகத் தெரிகிறது. துப்பாக்கிச்சூட்டுக்குப் பயந்து அங்கிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர்.
‘பிக் அப் டிரக்’ வாகனத்தை ஓட்டிய அந்த ஆடவர், புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட கூட்டத்திற்குள் புகுந்து ‘எத்தனை பேர்மீது ஏற்ற முடியுமோ அத்தனை பேர்மீது ஏற்ற’ முற்பட்டதாக அமெரிக்கக் காவல்துறை கூறியது.
அந்த ஆடவர், இரு காவல்துறை அதிகாரிகளைத் துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்தியதாகவும் அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் காவல்துறை சொன்னது.
இச்சம்பவத்தில் காயமுற்ற 30 பேர், நியூ ஆர்லியன்சில் உள்ள ஐந்து மருத்துவமனைகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
நியூ ஆர்லியன்ஸ், புதன்கிழமை இரவு ‘தி ஷுகர் போல்’ எனும் வருடாந்தர கல்லூரிக் காற்பந்து ஆட்டத்தை ஏற்று நடத்துகிறது. இதைக் காண அமெரிக்கா முழுவதிலிருந்தும் ரசிகர்கள் அங்கு திரண்டுள்ளதாக சிஎன்என் செய்தி தெரிவித்தது.