லாகூர்: பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாநிலத்தில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11) அதிகாலை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
அதில் குறைந்தது 20 பேர் மாண்டதாகவும் 7 பேருக்கு காயம் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாக்குதல் சம்பவம் ஒரு சிறிய நிலக்கரி சுரங்கத்தில் நடந்ததாகவும் மாண்டவர்கள் சுரங்கத்தில் வேலை செய்பவர்கள் என்றும் கூறப்படுகிறது.
கனிம வளங்கள் நிறைந்த பகுதியாக உள்ள பலுசிஸ்தானில் நாளுக்கு நாள் பயங்கரவாத சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
தற்போது சுரங்கம் தொடர்பான வர்த்தகங்களை அதிகரிக்க பாகிஸ்தானுக்கு சவூதி அரேபியாவைச் சேர்ந்த அரச தந்திரிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். இவ்வேளையில் தாக்குதல் நடந்திருப்பது பாகிஸ்தானின் வர்த்தகத்திற்கு தடையாக இருக்கும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
மேலும், இன்னும் சில நாள்களில் பாகிஸ்தான் பெரிய அளவில் வர்த்தக மாநாட்டை நடத்தவிருக்கும் நேரத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இதனால் பாகிஸ்தானுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

