பெருவின் தென்பகுதியில் உள்ள ஒரு தங்கச் சுரங்கத்தில் தீ ஏற்பட்டதில் குறைந்தது 27 பேர் மாண்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லத்தின் அமெரிக்க நாடுகளில் அதிக அளவில் தங்கம் உற்பத்தி செய்யும் நாடுகளில் பெருவும் ஒன்று. பெருவின் வரலாற்றில் இப்படியொரு சுரங்க விபத்து ஏற்பட்டதில்லை.
சம்பவம் மே 6 அன்று நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. மாண்டவர்கள் பற்றிய தகவல் கிடைத்த பிறகே அந்நாட்டு ஊடகங்கள் மே 7 அன்று தகவல் வெளியிட்டன.
சுரங்கத்தில் சிக்கிக்கொண்டவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பது பற்றி தெரிந்து கொள்ள அவர்களது உறவினர்களும் நண்பர்களும் சுரங்கத்திற்கு வெளியே காத்திருந்தனர்.
சுரங்கத்தின் மின்சார கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டு தீ ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
சுரங்கத்திற்குள் மாண்டவர்கள் கிட்டத்தட்ட 100 அடிக்கு கீழ் வேலை செய்துகொண்டிருந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
தீ ஏற்படும் போது சுரங்கத்தில் இருந்த அனைவரும் மாண்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் அந்நேரத்தில் சுரங்கத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்பது பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.