சரிந்துவிழுந்த கட்டடங்கள்; வீதிகளில் தங்கும் மக்கள்

ஆயிரக்கணக்கானோரைப் பலிகொண்ட மொரோக்கோ நிலநடுக்கம்

2 mins read
c67c8503-99e5-4314-9cdb-80b9248e2d31
ஆயிரக்கணக்கான மக்களை ஒரே நேரத்தில் பலிகொண்ட நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டடங்களும் இடிந்து நொறுங்கின. உடைந்து கிடக்கும் தன் வீட்டைப் பார்த்து யாரிடம் முறையிடுவது எனத் தெரியாமல் கதறி அழும் மாது. - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

ரபாத்: மொரோக்கோ நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்னும் ஏராளமானோர் கட்டட இடிப்பாடுகளில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பலி எண்ணிக்கை1,000க்கும் அதிகம் என்று சனிக்கிழமையன்று உள்துறை அமைச்சை மேற்கோள்காட்டி அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.

1,200க்கும் அதிகமானோர் பேர் காயமடைந்தனர்; அவர்களில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று அச்செய்தி கூறியது.

நிலநடுக்கத்தில் பல கட்டடங்களை இடிந்துவிழுந்தன. முக்கிய நகரங்களில் வசிப்பவர்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

கடந்த 2004க்குப் பிறகு அந்நாடு எதிர்கொண்ட மிக மோசமான நடுக்கம் இதுவாகும்.மக்கள் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பலர் கட்டடங்கள் இடிந்து இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டு இறந்துள்ளனர்.

இடிபாடுகளுக்குள் மக்களை மீட்கும் மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மொரோக்கோவின் ‘ஹை அட்லஸ்’ மலையில் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட வலுவான நிலநடுக்கம் 6.8 ரிக்டரில் பதிவாகியுள்ளது.

இதேநேரம் இத்துயரச் சம்பவத்திற்கு உலகத் தலைவர்கள் பலரும் தங்கள் நாட்டின் சார்பாக துக்கத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

யுனெஸ்கோ உலக மரபுடைமைத் தலமான மேரகேஷ் நகரில் சில கட்டடங்கள் இடிந்து விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல் கோபுரம் ஒன்று இடிந்து விழுந்ததில் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளதைத் தொலைக்காட்சியில் வெளியான படங்கள் காட்டுகின்றன.

மராகேஷில் உள்ள ஒரு சதுக்கத்தில் தங்கியுள்ள மக்கள்.
மராகேஷில் உள்ள ஒரு சதுக்கத்தில் தங்கியுள்ள மக்கள். - படம்: ஏஎஃப்பி
வீடுகள் இடிந்ததாலும் இடியக்கூடும் என்ற பயத்தாலும் சாலைகளில் தங்கியிருக்கும் மக்கள்.
வீடுகள் இடிந்ததாலும் இடியக்கூடும் என்ற பயத்தாலும் சாலைகளில் தங்கியிருக்கும் மக்கள். - படம்: இபிஏ

“நிலநடுக்கத்துக்குப் பிறகு நாங்கள் உடனடியாக ஓடத்தொடங்கினோம்,” என்று பழைமாய நகரில் வசிக்கும் திரு ஜௌஹாரி முகமது கூறினார். மக்கள் பாதுகாப்பிற்காக பரிதவிப்போடு ஓடிய காட்சிகளை அவர் விவரித்தார். “அதிர்ச்சியின் காரணமாகவும், பழைய நகரம் பழைய வீடுகளால் ஆனது என்பதாலும் என்னால் இன்னும் வீட்டில் தூங்க முடியவில்லை. ஒன்று விழுந்தால், அது மற்ற வீடுகளையும் பாதிக்கும். அடுக்கடுக்காக எல்லாம் விழும்,’‘ என்றார் அவர். இடிபாடுகளுக்கிடையே நொறுங்கிக் கிடக்கும் வாகனங்களின் படங்களை உள்ளூர் தொலைக்காட்சி காட்டியது.

எளிதில் அணுக முடியாத மலைப் பகுதிகளில் பலர் மாண்டுவிட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த இடத்திற்கு அருகில் உள்ள அஸ்னி எனும் மலைக் கிராமத்தில் பெரும்பாலான வீடுகள் சேதமடைந்ததாக கிராமவாசி கூறினார்.

கிட்டத்தட்ட 20 நொடிகள் நீடித்த நிலநடுக்கத்தை அடுத்து, மேலும் பல நில அதிர்வுகள் உணரப்பட்டதாகவும் அதனால் வீடுகளைவிட்டு வெளியேறி பிள்ளைகளுடன் வீதிகளில் தங்கியிருப்பதாகவும் சிலர் கூறினர்.

7.2 ரிக்டர் அளவுகொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டதாக மொரோக்கோ புவியியல் மையம் தெரிவித்தது. ஆனால், அது 6.8 ரிக்டர் அளவிலானது என்று அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம் பின்னர் திருத்தியது.

குறிப்புச் சொற்கள்