டெஹ்ரான்: ஈரானில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்களில் குறைந்தது 5,000 பேர் கொல்லப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 18) ஈரானிய வட்டார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இவர்களில் 500 பாதுகாப்புப் படை வீரர்களும் அடங்குவர். பயங்கரவாதிகளும் ஆயுதம் ஏந்திய கலவரக்காரர்களும் அப்பாவி ஈரானியர்கள் கொல்லப்படுவதற்குக் காரணம் என்று அவர் குற்றஞ்சாட்டினார்.
இந்த அதிர்ச்சியூட்டும் தகவலால் பெயர் குறிப்பிட மறுத்த அந்த அதிகாரி, வடமேற்கு ஈரானில் உள்ள குர்திஷ் பகுதிகளில் சில கடுமையான மோதல்களும் அதிக எண்ணிக்கையிலான இறப்புகளும் ஏற்பட்டதாகவும் ராய்ட்டர்சிடம் அவர் தெரிவித்தார்.
குர்திஷ் பிரிவினைவாதிகள் தீவிரமாகச் செயல்பட்டு வரும் பகுதி அது. மோசமான வன்முறைகள் வெடித்த இடங்களும் அங்குதான் உள்ளன.
"இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பில்லை,” என்றார் அந்த அதிகாரி.
இஸ்ரேல் மற்றும் வெளிநாடுகளில் உள்ள ஆயுதக் குழுக்கள் சாலைகளில் போராடியவர்களை ஆதரித்து ஆயுதங்களை ஏந்தியதாகவும் அவர் சொன்னார்.
ஜூன் மாதத்தில் ஈரான் மீது ராணுவத் தாக்குதல்களைத் தொடங்கிய பரம எதிரியான இஸ்ரேல் உட்பட வெளிநாட்டு சக்திகள் ஈரானின் அமைதியின்மைக்குக் காரணம் என்று ஈரானிய அதிகாரிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் சனிக்கிழமை அன்று (ஜனவரி 17) இறந்தவர்களின் எண்ணிக்கை 3,308ஐத் தொட்டுள்ளதாகவும் மேலும் 4,382 சம்பவங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட எச்ஆர்ஏஎன்ஏ என்ற மனித உரிமைக் குழு தெரிவித்தது. ஏறக்குறைய 24,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதையும் அது உறுதி செய்துள்ளது.
நார்வேயைத் தளமாகக் கொண்ட ஈரானிய குர்திஷ் அமைப்பான ஹெங்காவ், கடந்த டிசம்பர் மாத இறுதியில் வெடித்த போராட்டங்களின்போது ஏற்பட்ட மிகப்பெரிய மோதல்களில் சில வடமேற்கில் உள்ள குர்திஷ் பகுதிகளில் நடந்ததாகக் கூறியது.

