தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜெர்மனி கிறிஸ்துமஸ் சந்தையில் கார் மோதி ஐவர் மரணம்; சவூதி ஆடவர் கைது

2 mins read
a73a0a92-5fb2-4f29-ad82-1d8048b75f61
கிறிஸ்துமஸ் சந்தையில் மோதி, உயிர் சேதத்தை ஏற்படுத்திய காரை ஆய்வு செய்யும் விசாரணை அதிகாரிகள். - படம்: இபிஏ
multi-img1 of 2

பெர்லின்: கிழக்கு ஜெர்மனியில் உள்ள மாக்டெபர்க் நகரில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) கிறிஸ்துமஸ் சந்தையில் காரை மோதிய சம்பவத்தில் சவூதி ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் சிறு வயதுப் பிள்ளை உட்பட குறைந்தது ஐவர் கொல்லப்பட்டதாக ‘தி கார்டியன்’ நாளேடு தெரிவித்தது.

ஜெர்மனி தலைநகர் பெர்லினுக்கு தென்மேற்கில் 130 கி.மீ. தூரத்தில் உள்ளது மாக்டெபர்க். இச்சம்பவத்தில் 205க்கும் அதிகமானோர் காயமுற்றதாகவும் அவர்களில் 41 பேருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜெர்மானியப் பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ், உள்துறை அமைச்சர் நான்சி ஃபீசர் ஆகியோர் விபத்து நடத்து இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தனர்.

அந்தச் சந்தேக நபர், “2006லிருந்து ஜெர்மனியில் வசித்து வந்த ஒரு மருத்துவர்” என்று செக்ஸோனி-அன்ஹால்ட் மாநில முதல்வர் ரெய்னர் ஹெசோல்ஃப் கூறினார்.

அந்த ஆடவரின் நோக்கம் குறித்து தெரியவில்லை. அவரின் பெயர் தலிப் ஏ. என்றும் அவர் ஒரு மனநல மருத்துவர் என்றும் ஜெர்மானிய ஊடகங்கள் தெரிவித்தன.

“அவர் தனியாகச் செயல்பட்டதாகத் தெரிகிறது. எனவே இதுகுறித்து கூடுதல் ஆபத்து இருப்பதாக நாங்கள் கருதவில்லை,” என்றார் செக்ஸோனி-அன்ஹால்ட் உள்துறை அமைச்சர் தமாரா ஸிஸ்சாங்.

மாக்டெபர்க் நகருக்கு தெற்கில் 40 கி.மீ. தூரத்தில் உள்ள பெர்ன்பர்க்கில் வசித்த அந்த 50 வயது ஆடவரிடம் நிரந்தரவாசத் தகுதி இருந்ததாக அமைச்சர் கூறினார்.

சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சு இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளது.

மாக்டெபர்க் நகரில் உள்ள கிறிஸ்துமஸ் சந்தையைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த தடுப்புவேலிகளைத் தாண்டி அந்த ஓட்டுநரால் எப்படி நுழைய முடிந்தது என்பது பற்றித் தெரியவில்லை. அந்த கார் ஏறக்குறைய 365.8 மீட்டர் ஓடிய பிறகே நின்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த கறுப்பு BMW காரை வாடகைக்கு எடுத்த அந்த ஆடவர், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய கடைசி வெள்ளிக்கிழமை மக்கள் கூட்டம் மீது காரை மோதியதாக அதிகாரிகள் கூறினர்.

உள்ளூர் நேரப்படி இரவு 7 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, சந்தையைச் சுற்றியுள்ள பகுதி மூடப்பட்டதாகக் காவல்துறைப் பேச்சாளர் ஒருவர் சொன்னார்.

இந்நிலையில், ஜெர்மானியப் பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் தமது எண்ணங்கள் இருப்பதாகக் கூறினார். உள்துறை அமைச்சர் நேன்சி ஃபெய்சருடன் சம்பவ இடத்திற்குச் சென்ற அவர் ஆய்வு மேற்கொள்ளவிருந்தார்.

குறிப்புச் சொற்கள்