பெய்ரூட்: லெபனானிய அமைச்சரவை ஹிஸ்புல்லாவின் ஆயுதங்கள் குறித்து செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 5) விவாதிக்கிறது.
ஈரானிய ஆதரவுக் குழுவான ஹிஸ்புல்லாவை ஆயுதங்களைக் களையச் செய்வதற்கு லெபனானிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெருக்குதல் கொடுக்கிறது அமெரிக்கா. இல்லையென்றால் இஸ்ரேல் லெபனான் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
சென்ற ஆண்டு (2024) இஸ்ரேலுடன் நடந்த போரில் ஹிஸ்புல்லாவின் தலைவர்களும் ஆயிரக்கணக்கான போராளிகளும் மாண்டனர். அதன் எரிபடைக்கும் பெருத்த சேதம் ஏற்பட்டது.
ஹிஸ்புல்லாவின் ஆயுதக்களைவு குறித்து ஜூன் மாதம் அமெரிக்கத் தூதர் தாமஸ் பாரக் லெபனானிய அதிகாரிகளிடம் உத்தேசத் திட்டமொன்றை முன்மொழிந்திருந்தார்.
ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிட்டால் அதற்குக் கைம்மாறாக லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்திக்கொள்ளும் என்று திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் தென் லெபனானில் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள ஐந்து முனைகளிலிருந்து துருப்புகளையும் அது மீட்டுக்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஹிஸ்புல்லாவின் ஆயுதக்களைவை லெபனானிய அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும் என்று உத்தேசத் திட்டத்தில் கூறப்பட்டிருந்தது.
திட்டத்தை முன்னெடுக்க லெபனானுக்குச் சில முறை சென்றிருந்தார் திரு பாரக். ஆனால் ஆயுதக்களைவு குறித்து வெளிப்படையாக உறுதி தெரிவிப்பது நாட்டில் சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தும் என்று லெபனானிய அதிகாரிகளும் அரசதந்திரிகளும் கூறுகின்றனர்.