பெய்ரூட்டில் குண்டுமழை; உயிருக்கு பயந்து வெளியேறும் லெபனானியர்கள்

பெய்ரூட்டில் குண்டுமழை; உயிருக்கு பயந்து வெளியேறும் லெபனானியர்கள்

2 mins read
6df557e1-9c0d-41fb-8fe5-c1bf705b31b1
குறைந்தது பத்து வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும் அதையடுத்து, பெய்ரூட்டைக் கரும்புகை சூழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. - படம்: ஏஎஃப்பி

பெய்ரூட்: லெபனானியத் தலைநகர் பெய்ரூட் மீதான தாக்குதல்களை இஸ்‌ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.

ஹிஸ்புல்லா அமைப்பின் நிதிப் பிரிவுடன் தொடர்புடைய இடங்களைத் தாக்க இஸ்‌ரேல் தயாராகி வருகிறது.

அவ்விடங்களிலிருந்து உடனடியாக வெளியேறும்படி லெபனானியர்களுக்கு அது எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், நகரெங்கும் இஸ்‌ரேல் குண்டுமழை பொழிந்து வரும் நிலையில், நூற்றுக்கணக்கான பெய்ரூட்வாசிகள் உயிருக்குப் பயந்து அந்நகரிலிருந்து அக்டோபர் 20ஆம் தேதியன்று வெளியேறினர்.

குறைந்தது பத்து வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும் அதையடுத்து, பெய்ரூட்டைக் கரும்புகை சூழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

பெய்ரூட்டின் தென்பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு கட்டடம் இடிந்து விழுந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.

ஆனால் கட்டடம் இடிந்து விழுவதற்கு முன்பே அங்கிருந்த சிலர் தப்பி ஓடிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

எனவே, உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று அங்குள்ள மக்கள் கூறினர்.

கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.

தொடர் தாக்குதல்கள் காரணமாகப் பெய்ரூட் மக்கள் பீதி அடைந்து, வீடுகளிலிருந்து வெளியேறி சாலைகளில் கூடினர்.

பாதுகாப்பான இடத்துக்குத் தப்பிச் செல்ல பலர் முயன்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதற்கிடையே, லெபனானிய அதிகாரிகளுடன் அமெரிக்கத் தூதர் ஹோச்டைன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும் இஸ்‌ரேலின் தாக்குதல்கள் காரணமாக மாண்டோர் எண்ணிக்கை அதிகரித்து வரும்போதிலும் இஸ்‌ரேலுக்கே தனது ஆதரவு இருக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்களை இஸ்‌ரேலுக்கு அமெரிக்கா அனுப்பிவைத்துள்ளதாக அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் லோய்ட் ஆஸ்டின் கூறினார்.

குறிப்புச் சொற்கள்