பெய்ரூட்: லெபனானிய அதிபர் ஜோசஃப் அவூன், இந்த வாரம் வெள்ளை மாளிகைக்குத் தனது முதல் பயணத்தின் அங்கமாக வரும் செவ்வாய்க்கிழமை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பைச் சந்திக்கவுள்ளார்.
ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லாவின் ஆயுதங்களை எவ்வாறு அகற்றுவது, லெபனானிலிருந்து இஸ்ரேல் பின்வாங்குவதை எவ்வாறு உறுதி செய்வது போன்றவை குறித்த திட்டத்தைத் திரு டிரம்ப்பிடம் சமர்ப்பிப்பதற்காகத் திரு அவூன் அந்தப் பயணத்தை மேற்கொள்கிறார்.
கடந்த ஆண்டு அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முன்பு, அமெரிக்க ஆதரவு பெற்ற லெபனான் ராணுவத்தின் தளபதியாகப் பணியாற்றிய திரு அவூன், கடந்த 20 ஆண்டுகளில் வெள்ளை மாளிகைக்குச் செல்லும் முதல் லெபனான் நாட்டுத் தலைவராக உள்ளார். அங்கு அவர் திரு டிரம்ப்பை முதன்முறையாக நேருக்கு நேர் சந்திக்கவுள்ளார்.
வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பு லெபனானுக்கு முக்கியமான தருணமாகத் திகழும்.
இஸ்ரேலியப் படைகள் நாட்டின் தெற்குப் பகுதியின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளன, இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து லட்சக்கணக்கான லெபனான் மக்கள் இன்னும் இடம்பெயர்ந்துள்ளனர்.
மேலும், இஸ்ரேலுடனான அரசாங்கத்தின் நேரடிப் பேச்சுவார்த்தைகளையும், தனது ஆயுதங்களைப் பறிப்பதற்காக லெபனான் அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளையும் ஹிஸ்புல்லா நிராகரித்துள்ளது.
ஜூன் 26ல் அமெரிக்காவின் ஏற்பாட்டில் நடந்தேறிய அமைதிப் போச்சுவார்த்தைகளின்போது லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே எட்டப்பட்ட ஒப்பந்தத்தைச் செயல்படுத்த இஸ்ரேலுக்குத் தேவையான அழுத்தத்தைக் கொடுக்குமாறு திரு டிரம்ப்பிடம் கேட்கப்போவதாக திரு அவூன் முன்னதாகக் கூறினார்.
ஹிஸ்புல்லாவிடமிருந்து ஆயுதங்களை அகற்றுவது, இஸ்ரேலியப் படைகளைப் படிப்படியாகப் பின்வாங்க வைப்பது, இரு நாடுகளுக்கும் இடையே அமைதியான உறவுகளுக்கான சூழலை உருவாக்குவது ஆகியவற்றை அந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பேரளவில் இருக்கும் ஹிஸ்புல்லாவின் ஆயுதக் கிடங்கை எவ்வாறு செயலிழக்கச் செய்வது என்பது குறித்து எழுதப்பட்ட முன்மொழிவைத் திரு அவூன், திரு டிரம்ப்பிடம் சமர்ப்பிப்பார் என்று லெபனான் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இஸ்ரேல் தனது படைகளைத் திரும்பப் பெற அழுத்தம் கொடுப்பதற்கும், லெபனான் தம் அரசுரிமையை மீட்டெடுக்க உதவுவதற்கும் தேவையான செல்வாக்கு திரு டிரம்ப்பிடம் மட்டுமே இருப்பதாகத் திரு அவூன் நம்புவதாக அந்த அதிகாரி கூறினார்.
62 வயது திரு அவூன், டிரம்ப் வெள்ளை மாளிகையில் தம் இரண்டாவது பதவிக்காலத்தைத் தொடங்குவதற்கு சற்று முன்பு கடந்த ஆண்டு அதிபரானார். அவூனின் தேர்வை அமெரிக்கா வரவேற்றது.

