நியூயார்க்: இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே அதிகரித்துவரும் நெருக்கடி குறித்து பைடன் தெரிவித்த கருத்துக்கு லெபனானிய வெளியுறவு அமைச்சர் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.
இருந்தாலும் இவ்விவகாரத்தில் வாஷிங்டன் தலையிட்டு உதவ முடியும் என்று தாம் நம்புவதாக அவர் கூறினார்.
“அவரது கருத்து வலுவாக இல்லை. நம்பிக்கையளிக்கவில்லை. இப்பிரச்சினையைத் தீர்க்க உதவாது,” என்று லெபனானிய வெளியுறவு அமைச்சர் போவ் ஹபிப் சொன்னார்.
“ஆனால் எனக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கிறது. மத்திய கிழக்கு மற்றும் லெபனான் விவகாரத்தில் அமெரிக்கவால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும்,” என்று நியூயார்க்கில் நடைபெற்ற அனைத்துலக அமைதி பற்றிய மெய்நிகர் நிகழ்ச்சியில் போவ் ஹபிப் தெரிவித்தார்.
லெபனானில் அரை மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இடம் மாறியிருப்பதாகக் கூறிய அவர், அடுத்த இரண்டு நாள்களில் அமெரிக்க அதிகாரிகளை லெபனான் பிரதமர் சந்திக்க விரும்புவதாகவும் சொன்னார்.
காஸாவில் உள்ள ஹமாசுக்கு எதிராக ஓராண்டுக்கு மேலாக நீடிக்கும் போரில் இஸ்ரேல் தனது கவனத்தை தற்போது தெற்கு லெபனான் பக்கம் திருப்பியிருக்கிறது. அப்பகுதியிலிருந்துதான் ஹமாஸ் உதவியுடன் ஹிஸ்புல்லா போராளிகள் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி வருகின்றனர்.
இந்தத் தாக்குதலால் வடக்கு இஸ்ரேலில் ஏறக்குறைய 70,000 இஸ்ரேலியர்கள் வீட்டைவிட்டு வெளியேறியிருப்பதாக இஸ்ரேல் கூறுகிறது.
இந்நிலையில் பேசிய அமெரிக்க அதிபர் பைடன், பதற்றத்தைக் குறைத்து அமைதி காக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.
தொடர்புடைய செய்திகள்
“முழு அளவிலான போரில் யாருக்கும் விருப்பமில்லை. அரசதந்திர வழியில் தீர்வுகாண இன்னமும் சாத்தியமிருக்கிறது,” என்று 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐநா பொதுக் கூட்டத்தில் அவர் கூறினார்.
இஸ்ரேல்-லெபனான் எல்லையிலிருந்து ஹிஸ்புல்லாவை வெளியேற்றும் அரசதந்திர தீர்வை விரும்புவதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

