தென்கொரிய அதிபராக லீ ஜே மியூங் பதவியேற்பு

2 mins read
72326057-b5fa-4af8-a9b0-ce585a1d3529
செய்தியாளர் கூட்டத்தில் பேசிய தென்கொரிய அதிபர் லீ ஜே மியூங் (வலது). அவருடன் தென்கொரியப் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள கிம் மின் சியோக். - படம்: ஏஎஃப்பி

சோல்: தென்கொரிய அதிபராக ஜனநாயகக் கட்சித் தலைவர் லீ ஜே மியூங் பதவியேற்றுள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் அவர் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

சவால்மிக்க காலகட்டத்தில் திரு லீ தென்கொரிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க வரிவிதிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை, தென்கொரிய அரசியல் சூழலைச் சீரமைப்பது போன்ற சவால்களை அவர் எதிர்நோக்குகிறார்.

இந்நிலையில், உலகில் பல நாடுகளும் தன்னைப்பேணித்தனத்தைப் பின்பற்றற்த் தொடங்கியுள்ள நிலையில், தென்கொரியாவின் பொருளியலை மீட்டெடுக்கவிருப்பதாகத் திரு லீ உறுதியளித்துள்ளார்.

“லீ ஜே மியூங்கின் அரசாங்கம் நடைமுறைகேற்ற, சந்தை சார்ந்த அரசாங்கமாக இருக்கும்,” என்று நாடாளுமன்றத்தில் பதவியேற்பு உறுதிமொழி எடுத்தபின் அவர் கூறினார்.

அத்துடன், வடகொரியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்கவும் அதே நேரத்தில் அமெரிக்காவுடன் வலுவான பாதுகாப்பு ஒத்துழைப்பைப் பேணவும் திரு லீ உறுதிகூறியுள்ளார்.

“சண்டையில் வெல்வதைக் காட்டிலும் சண்டை போடாமல் வெல்வது சிறந்தது,” என்றார் அவர்.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ருபியோ, திரு லீக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தென்கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வலுவான தற்காப்பு. பொருளியல் உறவு இருப்பதை திரு ருபியோ சுட்டினார்.

“ஜப்பானும் தென்கொரியாவும் அண்டை நாடுகள். பல்வேறு அனைத்துலக விவகாரங்கள் தொடர்பாக இருநாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். தற்போதைய உத்திபூர்வச் சூழலிலும் ஜப்பான்-தென்கொரிய உறவுகளில் மாற்றம் ஏதும் இல்லை. ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மிகவும் முக்கியம்,” என்று ஜப்பானியப் பிரதமர் ஷிகேரு இஷிபா தெரிவித்தார்.

ஜப்பானும் தென்கொரியாவும் கூடிய விரைவில் இணைந்து இருதரப்பு உச்சநிலை மாநாட்டை நடத்த வேண்டும் என்றும் திரு இஷிபா செய்தியாளர்களிடம் கூறினார்.

“இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய நட்பு நாடு என்கிற முறையில் தென்கொரியாவுடனான உத்திபூர்வப் பங்காளித்துவத்தை வலுப்படுத்த இலக்கு கொண்டுள்ளோம். ஜனநாயகம், மனித உரிமை, சட்டம் ஆகியவை தொடர்பாக தென்கொரியாவைப் போலவே ஐரோப்பிய ஒன்றியமும் கடப்பாடு கொண்டுள்ளது. தென்கொரியாவின் உலகளாவியப் பங்களிப்பை மதிக்கிறோம்,” என்று ஐரோப்பிய மன்றத்தின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்