வதந்திகளைப் பரப்புவோர்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: ரோஸ்மா

வதந்திகளைப் பரப்புவோர்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: ரோஸ்மா

படம்: பெரித்தா ஹரியான்

14 Jun 2026 - 7:58 pm

1 mins read

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூர், சொகுசு சொத்துகளை வாங்கியதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை மற்றும் அவதூறானவை என்று மறுத்துள்ளார்.

13 மில்லியன் அமெரிக்க டாலர் (S$16.7 மில்லியன்) மதிப்பிலான சொகுசு சொத்துகள் உட்பட எந்தவோர் ஆடம்பரச் சொத்தின் கொள்முதல், நிதி பரிமாற்றம் அல்லது உரிமையாளராகத் தமக்கோ தங்களது குடும்பத்தினருக்கோ நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்தத் தொடர்பும் இல்லை என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், போலியான நிறுவனங்கள் அல்லது வெளிநாட்டு நிதி கட்டமைப்புகள் மூலம் இந்த பரிவர்த்தனைகள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூன் 14) வெளியிட்ட அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திட்டமிட்டுத் தங்களது குடும்ப நற்பெயரைக் கெடுக்க இத்தகைய போலியான காணொளிகள் பரப்பப்படுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள அவர், இது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் சமூக ஊடகத் தளங்கள் உடனடியாக அந்த அவதூறு உள்ளடக்கங்களை நீக்கவேண்டும் என்றும் வதந்திகளைப் பரப்புவோர் மீது சிவில் மற்றும் குற்றவியல் ரீதியான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரோஸ்மா எச்சரித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாநஜிப் ரசாக்வதந்திசொத்து