மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலம், வீட்டிலிருந்து வேலை செய்வதை அதிகாரபூர்வமாக அனுமதிக்கும் சட்டத்தை ஒத்திவைத்துள்ளது.
அந்தச் சட்டம் நடப்புக்குவர ஒரு மாதத்துக்கும் குறைவான காலமே எஞ்சியுள்ள நிலையில், வர்த்தகக் குழுக்கள் அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கும் சட்டம் குறித்து கூடுதல் கலந்துரையாடல்கள் நடைபெறவேண்டும் என்றும் அவை அழைப்புவிடுத்தன.
விக்டோரியா மாநிலத்தில் பரிந்துரைக்கப்பட்ட சட்டத்தின்கீழ் தகுதிபெறும் ஊழியர்கள் வாரத்திற்கு இரண்டு நாள்கள்வரை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கப்படுவர். அந்தச் சட்டம் செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து நடப்புக்கு வரவிருந்தது.
இந்நிலையில், விக்டோரியா மாநிலத்தின் புதிய முதல்வர் பென் கெரல், அடுத்த ஆண்டு ஜூலை மாதம்வரை அந்தச் சட்டத்தை ஒத்திவைத்துள்ளார்.
அவரது ஊழியர் அரசாங்கம், நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் கடுமையான போட்டிமிக்க தேர்தலுக்குத் தயாராகிவரும் நிலையில் திரு கெரல் அந்த முடிவை அறிவித்தார்.
“நான் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் வீட்டிலிருந்து வேலை செய்வதை ஆதரிக்கிறேன். நீக்குப்போக்கான வேலைச் சூழலை ஆதரிக்கிறேன். அது உழைக்கும் குடும்பங்களுக்கு நல்லது,” என்று செய்தியாளர்களிடம் கெரல் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) கூறினார்.
அதேவேளை, ஆஸ்திரேலியாவின் பொருளியல் என்பது உழைக்கும் குடும்பங்கள், வர்த்தக சமூகம், அரசாங்கம் ஆகியவற்றுக்கு இடையிலான பங்காளித்துவம் என்பதை அனைவரும் அறிந்திருக்கவேண்டும் என்று கெரல் வலியுறுத்தினார்.
மாநில முதல்வராக இருந்த ஜெசின்டா எலனுக்குப் பதிலாக ஜூலை மாதம் பதவியேற்ற கெரல், வர்த்தக சமூகத்துடன் கலந்தாலோசனை நடத்திவரும் வேளையில் தேர்தலுக்குமுன் புதிய சட்டத்தை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், விக்டோரியாவின் வர்த்தக, தொழிற்சபை, புதிய சட்டம் கட்டணங்களை அதிகரிக்கும் என்றும் வேலைக்கு ஆள்சேர்ப்பதைப் பாதிக்கும் என்றும் எச்சரித்தது.
ஆஸ்திரேலியாவின் சிறிய வர்த்தக அமைப்புகளின் சங்கம், சிறிய வர்த்தகங்கள் மேலும் சிரமத்துக்குள்ளாகும் என்று குறிப்பிட்டது.
கொவிட்-19 பெருந்தொற்றுக்குப்பின் ஊழியர்களை மீண்டும் அலுவலகங்களுக்குக் கொண்டுவருவதில் விக்டோரியா மாநிலம் தொடர்ந்து சிரமத்தை எதிர்கொண்டுள்ளது.


