குன்மிங்: தமது குடியிருப்புக் கட்டடத்தின் மின்தூக்கியைப் பயன்படுத்திய 59 வயது ஆடவர், அந்த மின்தூக்கி 35 மாடிகளுக்கு மேல்நோக்கியபடி கிடுகிடுவெனச் சென்று கூரைப்பகுதியை இடித்ததில் மாண்டார்.
திரு வெய் என்ற அந்த ஆடவர், தமது வீட்டில் பொருள் ஒன்றை எடுப்பதற்காக பிப்ரவரி 18ஆம் தேதி மின்தூக்கிக்குள் சென்றார்.
இருப்பினும், மின்தூக்கி 17வது மாடியிலிருந்து அதிவேகமாகக் கீழ்நோக்கிச் சென்ற பிறகு மீண்டும் 33வது மாடிக்கு மிக வேகமாகச் சென்றது.
மின்தூக்கி கடுமையாக ஆட்டம் கண்டதில் தலையில் மோசமான காயம் ஏற்பட்டதுடன் உயிர் போகும் அளவுக்கு ரத்தக் கசிவும் ஆடவருக்கு ஏற்பட்டது.
சம்பவ இடத்திலேயே வெய் உயிரிழந்துவிட்டதை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக சீன செய்தி நிறுவனமான சிசிடிவி தெரிவித்தது.
வெய்யின் மரணத்திற்கு மின்தூக்கிக் கோளாறு காரணம் என்று கூறும் ஆவணம் ஒன்றை குன்மிங் அவசரநிலை நிர்வாகப் பணியகம் வெளியிட்டது.
மாடிகளுக்கான அதிகபட்ச வரம்பை மீறிச் செல்லும்போது இதுபோன்ற கோளாறுகள் மின்தூக்கிகளில் நேரலாம் என்று கூறப்படுகிறது.
இதே மின்தூக்கி கடைசியாக 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சோதனையிடப்பட்டு பின்னர் 2024ஆம் ஆண்டு செப்டம்பரில் பராமரிப்புப் பணிக்கு உட்படுத்தப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
சம்பவத்தை அடுத்து அந்த வட்டாரத்தில் உள்ள அனைத்து மின்தூக்கிகளிலும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அந்த வளாகத்தின் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.