கோலாலம்பூர்: சிங்கப்பூர்-மலேசியாவுக்கு இடையேயான பெருவிரைவு ரயில் திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது ஜோகூர் பாருவில், அதன் சுற்று வட்டாரங்களில் கூட்ட நெரிசலைக் குறைக்க மலேசியா புதிய திட்டம் குறித்து ஆலோசித்து வருகிறது.
அதன்படி, மலேசிய அரசாங்கம் இலகு ரயில் திட்டம் அல்லது கம்பிவட இணைப்புடன் கூடிய டிராம் வண்டி திட்டத்தைக் கொண்டுவர ஆலோசித்து வருகிறது. இது ஜோகூர் பாரு குடியிருப்பாளர்கள், வருகை புரிவோர், ஊழியர்கள் ஆகியோர் பயன்படும் விதமாக அங்குள்ள போக்குவரத்து வசதியையும் மேம்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகிறது
இது குறித்தப் பேசிய ஜோகூர் மாநில போக்குவரத்து, உள்கட்டமைப்பு அதிகாரி முகமது ஃபசில், இலகு ரயில் அல்லது கம்பிவட இணைப்பு ரயில் தடம் அமைக்கும் திட்டத்தை சமர்ப்பிக்குமாறு தனியார் துறைக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்தத் திட்டம் குறித்த வரைவை இவ்வாண்டு இரண்டாம் காலாண்டில் முன்வைக்குமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளதாக திரு முகமது ஃபசில் கூறினார்.
தனியார் துறை சமர்ப்பிக்கும் திட்ட வரைவு இலகு ரயில், கம்பிவட இணைப்பு டிராம் வண்டித் திட்டம் இரண்டின் சாத்தியக்கூறு பற்றி ஆராய வழி வகுக்கும் என்று அவர் விளக்கினார். அந்த இரண்டு திட்டங்களை செயல்படுத்த மலேசிய ரிங்கிட் 7 பில்லியன்வரை ($S 2.1பி.) செலவாகலாம் என்று மதிப்பிடப்படுவதாக அவர் தெரிவித்தார்.
ஜோகூர் பாரு கூட்ட நெரிசலைக் குறைக்கும் இந்தத் திட்டத்தை முழுமையாக தனியார் துறை ஏற்று நடத்துவதாக இருக்கலாம் அல்லது அரசாங்க-தனியார் கூட்டு முயற்சியில் இயங்கும் திட்டமாக அமையலாம் என திரு ஃபசில் தெளிவுபடுத்தினார்.

