‘ஐஎஸ்’ பயங்கரவாதக் குழுவுடன் தொடர்பு: மலேசியாவில் சிறுவர்கள் உட்பட அறுவர் கைது

‘ஐஎஸ்’ பயங்கரவாதக் குழுவுடன் தொடர்பு: மலேசியாவில் சிறுவர்கள் உட்பட அறுவர் கைது

படம்: தி நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

07 Mar 2026 - 7:01 pm

1 mins read

கோலாலம்பூர்: ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 16 முதல் 21 வயதுக்குட்பட்ட ஆறு பேரை மலேசியக் காவல்துறை கைது செய்துள்ளது.

பிப்ரவரி 14, 15 ஆகிய தேதிகளில் கிள்ளான் பள்ளத்தாக்கு, ஜோகூர், கெடா, திரங்கானு ஆகிய மாநிலங்களில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளில் அவர்கள் பிடிபட்டனர். இது குறித்த தகவலை காவல்துறை படைத் தலைவர் முகமது காலித் இஸ்மாயில் வெள்ளிக்கிழமை (மார்ச் 6) உறுதிப்படுத்தினார்.

கைது செய்யப்பட்டவர்களில் 18 வயதுக்குட்பட்ட மூன்று சிறுவர்களும் அடங்குவர். இணையம் வாயிலாகத் தீவிரவாதக் கொள்கைகளைப் பரப்புதல், ஆள் திரட்டுதல், தாக்குதல்கள் குறித்துக் கலந்தாலோசித்தல் போன்ற நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட்டதாகப் புலனாய்வில் தெரியவந்துள்ளது. 2012 பாதுகாப்புச் சட்டத்தின் (Sosma) கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், கைதுசெய்யப்பட்டுள்ள சிறுவர்களின் உரிமைகள் 2001 குழந்தைகள் சட்டத்தின்படி, பாதுகாக்கப்படுவதாக காவல்துறைத் தரப்பு தெரிவித்தது.

சந்தேக நபர்களிடமிருந்து 11 கைப்பேசிகள், இரண்டு மடிக்கணினிகள், நான்கு ஐஎஸ் கொடிகள், தீவிரவாதக் கருத்துகள் கொண்ட மூன்று புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் இத்தகைய செயல்களைத் தடுக்க கைதுகள் தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மக்களின் ஒருமைப்பாட்டைப் பேணவும் அமைதியை நிலைநாட்டவும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்