ஈரான் போர் தொடங்கியதிலிருந்து திரவ இயற்கை எரிவாயு விலை 80 விழுக்காடு அதிகரிப்பு

ஈரான் போர் தொடங்கியதிலிருந்து திரவ இயற்கை எரிவாயு விலை 80 விழுக்காடு அதிகரிப்பு

2 mins read
547ba213-f285-47d8-92d2-5dd47e2dc880
ஆளில்லா வானூர்தி தாக்குதலை ஈரான் நடத்திய பிறகு, கத்தார் தனது ‘ராஸ் லஃப்பான்’ ஏற்றுமதி நிலையத்தைக் கடந்த வாரம் மூடியது. - படம்: ராய்ட்டர்ஸ்

மத்திய கிழக்கில் நிலவும் போர், திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) விநியோகத்தைப் பல மாதங்களுக்குப் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு ஆசியா தயாராகி வருகிறது. உலகின் மிகப் பெரிய ஏற்றுமதி ஆலையில் ஏற்பட்டுள்ள நீண்டகால முடக்கம், விநியோகத் தட்டுப்பாட்டையும் விலை உயர்வையும் ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

தாய்லாந்து நிறுவனங்கள் மே மாதம் வரையிலான எல்என்ஜி விநியோகத்தைப் பெற முயன்று வருவதாகத் தகவலறிந்த வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். பங்ளாதேஷ், ஏப்ரல் மாதத்திற்கான எரிவாயுவை வாங்கியுள்ளதோடு, மே மாதத்திலிருந்தும் எரிபொருளைக் கொள்முதல் செய்வது தொடர்பாக ஆலோசித்து வருகிறது. தைவான் மற்றும் தென் கொரியாவின் முக்கிய இறக்குமதி நிறுவனங்கள் இந்த இரண்டு மாதங்களுக்குத் தேவையான கூடுதல் எரிவாயுவை வாங்கத் தயாராகி வருகின்றன.

ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரும் என ஆசிய இறக்குமதி நிறுவனங்கள் நம்பவில்லை என்பதையும் உலகின் 20 விழுக்காடு எல்என்ஜியை வழங்கும் கத்தாரின் உற்பத்தி முடக்கம் நீண்டகாலம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதையும் இந்த நடவடிக்கைகள் காட்டுகின்றன. அந்த ஆலை எவ்வளவு காலம் மூடப்படுகிறதோ, அவ்வளவு தூரம் விநியோகப் பாதிப்பு மோசமாகும். ஏனெனில், இந்த எரிபொருளை ஏற்றுமதி செய்ய மாற்று வழிகளோ அல்லது இழப்பை ஈடுகட்ட வேறு இடங்களில் கூடுதல் உற்பத்தித் திறனோ இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியாவில் ‘ஸ்பாட் எல்என்ஜி’ விலையானது ஒரு மில்லியன் பிரிட்டிஷ் வெப்ப அளவு முறைக்கு ஏறத்தாழ 18 அமெரிக்க டாலராக உள்ளது. கடந்த வாரம் நிலவிய உச்சகட்ட விலையான 25 டாலரிலிருந்து சற்று குறைந்திருந்தாலும், போர் தொடங்குவதற்கு முன்பிருந்த விலையை விட இது இன்னும் 80 விழுக்காடு அதிகமாகவே உள்ளது.

ஆளில்லா வானூர்தி தாக்குதலை ஈரான் நடத்திய பிறகு, கத்தார் தனது ‘ராஸ் லஃப்பான்’ ஏற்றுமதி நிலையத்தைக் கடந்த வாரம் மூடியது. இது சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் எரிவாயு விலையை அதிரடியாக உயர்த்தியது. ஷெல் உள்ளிட்ட பல நிறுவனங்கள், ஆசிய வாடிக்கையாளர்களுக்கான கத்தார் எல்என்ஜி விநியோகத்தில் தவிர்க்க முடியாத சூழல் காரணமாக ஒப்பந்தத்தை நிறைவேற்ற இயலாத நிலையை அறிவித்துள்ளன.

இது சிங்கப்பூர் உட்பட ஆசியாவில் நிலவும் எல்என்ஜி தட்டுப்பாடு மோசமடைவதற்கான அறிகுறிகளைக் காட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்