ஈப்போ: மலேசியாவின் பேராக் மாநிலத்தின் தாப்பா நகரில் ஞாயிற்றுக்கிழமையன்று நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கையின்போது, 37 செம்மறியாடுகள், 27 வெள்ளாடுகள் ஆகியவற்றை லாரியில் சட்டவிரோதமாகக் கொண்டுசெல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சியை பேராக் விலங்கு மருத்துவச் சேவைகள் துறை முறியடித்தது.
காலை 11 மணியளவில் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் அமலாக்கக் குழுவினர் லாரி ஒன்றைத் தடுத்து நிறுத்தியதாக அதன் இயக்குநர் டாக்டர் சைஃபுல்லிசாம் அப்துல் காதர் தெரிவித்தார்.
பலி கொடுப்பதற்காகக் கொண்டு செல்லப்பட்டதாக நம்பப்படும் அந்தக் கால்நடைகளின் மதிப்பு 30,000 ரிங்கிட் எனவும் லாரியின் மதிப்பு 80,000 ரிங்கிட் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி பறிமுதல் செய்யப்பட்டவற்றின் மொத்த மதிப்பு 110,000 ரிங்கிட் ஆகும் என்று அவர் கூறினார்.
“கால்நடைப் போக்குவரத்து தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டிருந்தபோது, விலங்குகளை ஏற்றிச் சென்ற இந்த லாரியைக் கண்டோம். கால்நடைகள் கிளந்தானில் இருந்து கொண்டுவரப்பட்டதாக நம்பப்படுகிறது. மேலும், ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு சிலாங்கூருக்கு அவை கொண்டு செல்லப்பட இருந்தன,” என்று டாக்டர் சைஃபுல்லிசாம் தெரிவித்தார்.
31 வயது லாரி ஓட்டுநரையும் அதிகாரிகள் தடுத்து வைத்தனர். விசாரணைக்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
அந்த வாகனத்துக்குச் செல்லுபடியாகும் போக்குவரத்து அனுமதி ஆவணம் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்ததாகவும் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.

