ஜோகூர் சிங்க நடனக் குழுக்களை ஏமாற்றும் கடன்முதலைகள்

2 mins read
3bdbc13c-4036-4879-9ff1-c72c8d290da5
சிங்க நடனக் குழுக்களைக் கொண்டு கடன்காரர்களுக்குத் தொந்தரவு தர கடன்முதலைகள் முற்பட்டன. - படம்: ராய்ட்டர்ஸ்

ஜோகூர் பாரு: ஜோகூரின் சில பாரம்பரிய சிங்க நடனக் குழுக்களைக் கடன்முதலைகள் கடன்காரர்களைத் தொந்தரவு செய்வதற்காகப் பயன்படுத்திய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தாமான் ஜோகூர் ஜெயாவில் உள்ள ஓர் ஆடவரின் பிறந்தநாளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கவேண்டும் என சிங்க நடனக் கலைஞர்களை ஒருவர் ஏப்ரல் 6ஆம் தேதி முன்பதிவு செய்ததாக கூலாய் ஹுவா யீ சிங்க, கடல்நாக நடன சங்கத் தலைவர் லாய் என் லியாங் தெரிவித்தார்.

பிறந்தநாள் கொண்டாடும் நபரின் வீட்டிலிருந்து கட்டணத்தைப் பெருவதற்காக சிங்க நடனத்தைக் காணொளியாகப் பதிவுசெய்யும்படியும் முன்பதிவு செய்த ஆடவர் கூறியுள்ளார்.

“ஒருவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக சில நேரங்களில் கடைசி நிமிட விண்ணப்பங்களையும் நாங்கள் ஏற்பதுண்டு,” என்ற திரு லாய், $420 கட்டணத்தில் சிங்க நடனம் ஆட ஒப்புக்கொண்டதாகச் சொன்னார்.

கூலாயிலிருந்து கிட்டத்தட்ட 39 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து ஆடவரின் வீட்டைச் சென்றடைந்த சிங்க நடனக் குழுவினர் வழக்கம்போல நடனமாடி நல்வாழ்த்துகளையும் கூறினர்.

ஆனால் வீட்டுக்குள்ளிருந்து அதிர்ச்சியுடன் வெளியே வந்த ஒரு பெண் நடனக் குழு குறிப்பிட்ட ஆடவர் அங்கு இல்லை என்று சொன்னதாக திரு லாய் கூறினார்.

முன்பதிவு செய்தவரை மீண்டும் தொடர்புகொண்டபோது ஆடவர் பணத்தைத் தர மறுத்தார். அதோடு எதிர்காலத்தில் அதுபோல கடன்காரர்களுக்குத் தொந்தரவு தர 1,000 மலேசிய ரிங்கிட் கொடுப்பதாகவும் ஆடவர் கூறினார்.

இதேபோன்ற சம்பவம் மலேசியாவில் உள்ள இதர சிங்க நடனக் குழுக்களுக்கும் நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. மீண்டும் அதுபோன்ற சம்பவம் நடந்தால் நடனக் குழுக்கள் காவல்துறையிடம் புகாரளிக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

குறிப்புச் சொற்கள்