சோல்: அண்மைய உள்ளூர் ஊராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவில், வாக்குச்சீட்டுகள் பற்றாக்குறை ஏற்பட்டது குறித்து மக்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியதன் விளைவால் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) தென்கொரிய அரசாங்கம் விசாரணை மேற்கொள்ள முன்வந்துள்ளது.
முன்னெப்போதும் நடந்திராத வகையில், ஏறத்தாழ இருபதுக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் வாக்குச் சீட்டுகளுக்கான பற்றாக்குறை ஏற்பட்டது. நகர ஆளுநர்கள் (மேயர்), உள்ளூர் அரசாங்க அதிகாரிகள், செயலவை உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு வாக்குப் பதிவு பல பகுதிகளில் நடந்தது.
தென்கொரிய தேர்தல் ஆணையத்துக்குப் பெருத்த அவமானத்தை ஏற்படுத்திவிட்ட இந்நிலையில், வாரயிறுதியில் பாதிக்கப்பட்ட வாக்குச் சாவடிகளின் அருகில் ஆயிரக்கணக்கானோர் தெருக்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
விசாரணை ஆணையம்
பற்றாக்குறையின் காரணத்தை அறிய அரசாங்க வழக்கறிஞர்களும் காவல்துறையினரும் இணைந்து ஓர் விசாரணை ஆணையம் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளதாக தலைமை சட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜூன் 3ஆம் தேதி நடந்த உள்ளூர் தேர்தலில் வாக்காளர்கள் ஜனநாயகக் கடமையாற்ற தடை ஏற்பட்டதற்கான முழு விவரங்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்று தலைமை சட்ட அலுவலகம் உறுதி செய்தது.
தலைநகர் சோலில் உள்ள நீதிமன்றம், விசாரணை செயல்பாடுகளுக்கு ஏற்றபடி பாதிக்கப்பட்ட வாக்குச் சாவாடி ஒன்றை அதேநிலையில் பாதுகாக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

